தருமபுரம் ஆதீன மடத்தின் பாரம்பரிய நிகழ்ச்சி மீதான தடை உத்தரவை திரும்பப்பெற வேண்டும்-அர்ஜூன் சம்பத்

தருமபுரம் ஆதீன மடத்தின் பாரம்பரிய நிகழ்ச்சி மீதான தடை உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என அர்ஜூன் சம்பத் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2022-05-02 19:00 GMT
சீர்காழி:-

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 
அப்போது அவர் கூறியதாவது:- 
தமிழையும், சைவத்தையும் அடிப்படையாக கொண்டது தருமபுரம் ஆதீன மடம். இத்தகைய மடத்தின் பட்டினப்பிரவேச விழாவின்போது ஆதீனத்தை பல்லக்கில் மனிதர்கள் தூக்கி செல்லும் நிகழ்ச்சிக்கு உதவி கலெக்டர் தடை விதித்து உள்ளார். தருமபுரம் ஆதீனம் தற்போது மடத்தின் பாரம்பரியத்தையும், மரபுகளையும் காக்கின்ற இடத்தில் இருக்கிறார். கடந்த காலங்களில் இது போன்ற எதிர்ப்புகள் வந்த போது கூட எதிர்ப்புகளையும் மீறி பட்டினப்பிரவேசம் என்கிற இந்த பாரம்பரிய நிகழ்ச்சியானது நடைபெற்று வந்தது. திருமடங்களுக்கு என்று பாரம்பரிய நிகழ்வுகளும், மரபுகளும் தனியாக உள்ளன. இதனை தடை செய்வது அரசாங்கம் இந்து சமய நிகழ்வுகளில் தலையிடும் செயல் ஆகும். சட்டப்படியும் கூட உதவி கலெக்டர் செய்த செயல் தவறானது. உடனடியாக இந்த தடை உத்தரவை திரும்பப்பெற வேண்டும். வழக்கம்போல் ஆதீனத்தின் பாரம்பரிய நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்