அஞ்சுகிராமம்:
அஞ்சுகிராமம் அருகே அரசு பஸ் மோதி வாலிபர் பலியானார்.
நெல்லை மாவட்டம் கூட்டப்புளி பகுதியை சேர்ந்தவர் கென்னடி. இவருடைய மகன் ஆன்டணி ஜோ ரஜிஷ்(வயது 18). 12-ம் வகுப்பு படித்து முடித்த ஆன்டணி ஜோ ரஜிஷ், தற்போது கப்பல் சம்பந்தமான படிப்பை படிக்க முயற்சி செய்து வந்தார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று அவர் மோட்டார் சைக்கிளில் நாகர்கோவிலுக்கு சென்று விட்டு கூட்டப்புளிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். மயிலாடி புதூர் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகில் சென்றபோது, எதிரே அஞ்சுகிராமத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி அரசு பஸ் வேகமாக வந்தது. இதை கண்ட ஆன்டணி ஜோ ரஜிஷ் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சை வரவழைத்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து அவரை பரிசோதனை செய்தபோது, ஆன்டணி ஜோ ரஜிஷ் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.
பின்னர் இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெஸிமேனகா சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். தொடர்ந்து ஆன்டணி ஜோ ரஜிசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.