லாரி மோதி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளி பலி டிரைவர் கைது
லாரி மோதி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளி பலி டிரைவர் கைது
கந்தம்பாளையம்:
கந்தம்பாளையம் அருகே லாரி மோதி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளி பலியானார். லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
லாரி டிரைவர்
நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருேக உள்ள கோதூர் உத்திக்காபாளையத்தை சேர்ந்தவர் செந்தில். இவருடைய மகன் விக்னேஷ் (வயது 25). இவர் மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கவுசல்யா (22) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை.
இந்த நிலையில் விக்னேஷ் சம்பவத்தன்று வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது உலகபாளையம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது எதிரே கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரி கண் இமைக்கும் நேரத்தில் மொபட் மீது மோதியது.
டிரைவர் கைது
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த விக்னேசை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விக்னேஷ் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சித்தூர் பகுதியை சேர்ந்த கோவிந்தன் (46) என்பவரை கைது செய்தனர்.