புதுச்சத்திரம் அருகே ரூ.8.58 லட்சத்தில் தனிநபர் கிணறு அமைக்கும் பணி மத்திய இணை மந்திரி முருகன் தொடங்கி வைத்தார்

புதுச்சத்திரம் அருகே ரூ.8.58 லட்சத்தில் தனிநபர் கிணறு அமைக்கும் பணி மத்திய இணை மந்திரி முருகன் தொடங்கி வைத்தார்

Update: 2022-05-02 17:07 GMT
நாமக்கல்:
புதுச்சத்திரம் அருகே ரூ.8.58 லட்சத்தில் தனிநபர் கிணறு அமைக்கும் பணியை மத்திய இணை மந்திரி எல்.முருகன் தொடங்கி வைத்தார்.
தனிநபர் கிணறு
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் கல்யாணி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் உள்ள பெரிய தொட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த கேசவன், மோகன்குமார், தேவராஜ் ஆகிய 3 விவசாயிகளுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கான தனிநபர் கிணறு அமைக்க தலா ரூ.8.58 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 
இதனிடையே அதற்கு பூமிபூஜை நேற்று பெரிய தொட்டிப்பட்டியில் நடந்தது. பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம், விவசாய அணி மாநில தலைவர் நாகராஜன், மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, புதுச்சத்திரம் ஒன்றிய தலைவர் வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
இதில் மத்திய இணை மந்திரி டாக்டர் எல்.முருகன் கலந்து கொண்டு கிணறு அமைக்கும் பணியை அடிக்கல் நாட்டி பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். முன்னதாக பூமிபூஜை நிகழ்ச்சிக்கு வந்த எல்.முருகனுக்கு அதிர்வேட்டுகள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விவசாயிகள் வங்கி கணக்கு
பின்னர் நடந்த கூட்டத்தில் மத்திய மந்திரி முருகன் பேசியதாவது:- கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு விவசாயிகளின் தற்கொலை தொடர் கதையாக இருந்து வந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த பிரதமர் மோடி, விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரத்தை நேரடியாக வங்கி கணக்கில் வழங்கி வருகிறார். ஏழை, எளிய மக்கள் நேரடியாக பயன்பெறும் வகையில் திட்டங்களை வழங்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் எண்ணமாக உள்ளது.
அதன் ஒரு பகுதியாக இன்று 3 விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ரூ.8.59 லட்சத்தில் கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் ரூ.1.80 லட்சத்தில் அனைவருக்கும் வீடு, இலவச கியாஸ் இணைப்பு, பயிர் காப்பீடு, ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீட்டு திட்டம் என பல்வேறு திட்டங்களை கொடுத்து வருகிறார். 
திட்டங்கள்
அதேபோல் கொரோனா காலத்தில் கூடுதலாக 5 கிலோ அரிசி, மாதம் ரூ.500 வழங்கப்பட்டது. எனவே ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் பிரதமர் மோடி திட்டங்களை வழங்கி வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாவட்ட பார்வையாளர் சிவகாமி பரமசிவம், மாவட்ட பொதுச் செயலாளர்கள் முத்துக்குமார், சேதுராமன், மாவட்ட செயலாளர்கள் லோகேந்திரன், ஹரிஹரன், மாவட்ட துணைத்தலைவர்கள் சித்ரா, பழனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்