பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தின் போது சிவசேனா எங்கிருந்தது என்று உங்கள் தலைவர்களிடம் சென்று கேளுங்கள்-பட்னாவிசுக்கு, சஞ்சய் ராவத் பதில்

பாபர் மசூதி இடிப்பு சமயத்தில் சிவசேனா எங்கிருந்தது என்று உங்கள் தலைவர்களிடம் சென்று கேளுங்கள் என தேவேந்திர பட்னாவிசுக்கு, சஞ்சய் ராவத் பதிலடி கொடுத்துள்ளார்.

Update: 2022-05-02 17:07 GMT
கோப்பு படம்
மும்பை, 
பாபர் மசூதி இடிப்பு சமயத்தில் சிவசேனா எங்கிருந்தது என்று உங்கள் தலைவர்களிடம் சென்று கேளுங்கள் என தேவேந்திர பட்னாவிசுக்கு, சஞ்சய் ராவத் பதிலடி கொடுத்துள்ளார். 
அனுமன் பாடல்கள்
மராட்டிய அரசியலில் சிவசேனா, பா.ஜனதா இடையேயான வார்த்தை போர் சூடு பிடித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவரான தேவேந்திர பட்னாவிஸ், பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தின் போது சிவசேனா அங்கு இல்லை என்று குற்றம் சாட்டினார். 
இதேபோல நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே மசூதியில் இருந்து ஒலிபெருக்கிகளை நீக்காவிட்டால் இந்துக்கள் அனைவரும் மசூதியின் வெளியில் அதிக சத்தத்தில் அனுமன் பாடல்களை ஒலிபரப்ப வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
இவற்றிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கூறியதாவது:-
நிலைமை மாறிவிட்டது...
பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது சிவசேனாவினர் எங்கே இருந்தனர் என்று யாருக்காவது சந்தேகம் தோன்றினால், அவர்கள் மறைந்த பா.ஜனதா தலைவர் சுந்தர் சிங் பண்டாரியிடம் சென்று சிவசேனா அப்போது எங்கே இருந்தது என்று கேட்க வேண்டும். நீங்கள் அப்போதைய சி.பி.ஐ. அறிக்கையை பாருங்கள். ஐ.பி. அறிக்கையை பாருங்கள். 
சிவசேனா எங்கே இருந்தது என்ற அறிவு இல்லாதவர்களுக்கு பதில் கிடைக்கும். இன்று நிலைமை மாறிவிட்டது. மக்கள் நீங்கள் கிளப்பி விடும் பிரச்சினைகளை காதில் வாங்க மாட்டார்கள். 
வேலையின்மை, பணவீக்கம் மற்றும் சீன ஊடுருவல் போன்ற பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசைதிருப்ப அனுமன் பஜனை மற்றும் அயோத்தி மசூதி இடிப்பு தொடர்பான பிரச்சினைகள் எழுப்பப்படுகின்றன. 
ஒற்றுமைக்கு எதிரானது
ஒலி பெருக்கிகள் ஒரு பிரச்சினை இல்லை. நகரத்தில் மற்ற அழுத்தமான பிரச்சினைகள் உள்ளன. இந்த ஒலிப்பெருக்கிகளுக்கு யார் மின்சாரம் வழங்குகிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும். இது இந்துத்வா இல்லை. 
இதுபோன்ற பிரச்சினைகளை எழுப்புவது நாட்டின் ஒற்றுமைக்கு எதிரானது. ஒலிபெருக்கிகளால் மக்கள் பாதிக்கபடக்கூடாது என்பதே எங்கள் நிலைபாடு. இந்த பிரச்சினைக்காக நாங்கள் போராட்டம் நடத்தி உள்ளோம். இதன்பிறகு தான் சுப்ரீம் கோர்ட்டு இது தொடர்பான வழிகாட்டுதல்களை கொண்டு வந்தது. 
இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்