பஸ்சை சாமர்த்தியமாக நிறுத்தியதால் பயணிகள் உயிர்தப்பினர்
திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அரசு பஸ்சை டிரைவர் சாமர்த்தியமாக நிறுத்தியதால் பயணிகள் உயிர்தப்பினர்.;
மேட்டுப்பாளையம்
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து கோவைக்கு அரசு பஸ் நேற்று மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டது. பஸ்சை அருவங்காட்டை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 43) என்பவர் ஓட்டினார். கண்டக்டராக மணிகண்டன் (40) என்பவர் பணியில் இருந்தார். இந்த பஸ்சில் சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
பஸ் மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் பிளாக் தண்டர் பூங்கா அருகே வந்தபோது, திடீரென பஸ் டிரைவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, வலிப்பு வந்தது. இந்த நிலையில் டிரைவர் சிவக்குமார் சமயோசிதமாக செயல்பட்டு பஸ்சை சாலையோரத்தில் இருந்த சிறிய பள்ளத்தில் நிறுத்த முயற்சி செய்தார்.
அப்போது எதிரே வந்த 2 கார்களின் மீது லேசாக மோதி பஸ் நின்றது. அரசு பஸ் டிரைவர் விரைந்து செயல்பட்டு பஸ்சை நிறுத்தியதால் பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதையடுத்து பஸ் டிரைவரை பயணிகள் பாராட்டினார்.