பள்ளி மாணவர்கள் 2 பேர் கட்டிப்புரண்டு சண்டை
கோவை வடவள்ளியில் யார் பெரியவன் என்பதில் ஏற்பட்ட மோதலில் பள்ளி மாணவர்கள் 2 பேர் கட்டிப்புரண்டு சண்டையிட்டனர். இதை தடுக்க வந்த கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து விழுந்தது.
வடவள்ளி
கோவை வடவள்ளியில் யார் பெரியவன் என்பதில் ஏற்பட்ட மோதலில் பள்ளி மாணவர்கள் 2 பேர் கட்டிப்புரண்டு சண்டையிட்டனர். இதை தடுக்க வந்த கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து விழுந்தது.
பிளஸ்-2 மாணவன்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கோவை ஒண்டிப்புதூர் பஸ் நிறுத்தத்தில், சில நாட்களுக்கு முன்பு பள்ளி மாணவர்கள் இரு தரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகளின் பெற்றோர்களை அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியது.
இந்த நிலையில் கோவையை அடுத்த வடவள்ளியில் யார் பெரியவன் என்பதில் ஏற்பட்ட போட்டியில் 2 மாணவர்களுக்குள் கடும் மோதல் ஏற்பட்டது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை வடவள்ளி அருகே மருதமலையில் உள்ள அரசு பள்ளியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் மீது ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து அந்த மாணவன் பள்ளியில் இருந்து மாற்று சான்றிதழை வாங்கிச்சென்று வேறு பள்ளியில் சேர்ந்தான். தற்போது அந்த மாணவன் பிளஸ்-2 படித்து வருகிறான்.
யார் பெரியவன் என்பதில் மோதல்
இந்த நிலையில் அந்த மாணவன் கடந்த வாரம், தான் ஏற்கனவே படித்த பள்ளிக்கு சென்றான். அப்போது அங்கு பிளஸ்-1 படித்து வரும் மாணவனிடம், நான் இந்த பள்ளியை விட்டு செல்ல நீ தான் காரணம் என்றுக்கூறினான். இதனால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது தகராறாக மாறியது.
இதையடுத்து அங்கிருந்த சக மாணவர்கள் 2 பேரையும் சமரசம் செய்தனர். ஆனால் 2 பேரிலும் யார் பெரியவன் என்று கண்டிப்பாக முடிவு செய்ய வேண்டும் என்றும், இதற்காக 2 பேரும் சண்டையிட்டு, அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவன்தான் பெரியவன் என்று முடிவு செய்து கொள்ளலாம் என்று இருவரும் கூறியுள்ளார்கள்.
கட்டிப்புரண்டு சண்டை
இதை தொடர்ந்து ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து சண்டை போடலாம் என்றும், அதற்கான தேதியும் ரகசியமாக முடிவு செய்தனர். பின்னர் 2 பேரும் அரசு பள்ளியின் பின்புறத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு தங்களது நண்பர்களுடன் சென்றனர்.
அங்கு மாணவர்கள் 2 பேரும் மோதலில் ஈடுபட்டனர். இதில், ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டதுடன் கட்டிப்புரண்டு சண்டையிட்டுக்கொண்டு இருந்தனர். இது பிளஸ்-1 வகுப்பு படிக்கும் மாணவனின் அண்ணனான 3-ம் ஆண்டு கல்லூரி படித்து வரும் 21 வயதான மாணவருக்கு தகவல் தெரிந்தது. உடனே அந்த மாணவர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார்.
கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து
அப்போது அங்கு மாணவர்கள் கூடி நின்று கைகளை தட்டி ஆரவாரம் செய்து கொண்டு இருக்க, 2 மாணவர்களும் ஆக்ரோஷமாக சண்டையிட்டுக்கொண்டு இருந்தனர். அதை கல்லூரி மாணவர் பார்த்ததும் ஓடிச்சென்று, 2 பேரையும் பிரித்து விட்டதுடன் சமாதானம் பேசினார்.
அதை அவர்கள் ஏற்காமல் சண்டைபோடுவதிலேயே குறியாக இருந்தனர்.இதையடுத்து கல்லூரி மாணவர் தனது தம்பியை அங்கிருந்து அழைத்துச்சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த பிளஸ்-2 மாணவன் தனது நண்பர்கள் 2 பேர் உதவியுடன் தான் கையில் இருந்த கத்தியை எடுத்து கல்லூரி மாணவர் தலையில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.
இதில் காயமடைந்த கல்லூரி மாணவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சீர்த்திருத்த பள்ளியில் அடைப்பு
இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிளஸ்-2 மாணவனை கைது செய்தனர். அத்துடன் அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவான 2 பேரை தேடி வருகிறார்கள்.
மாணவர்களுக்குள் யார் பெரியவன் என்பதில் ஏற்பட்ட போட்டியில் கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.