கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. உதவியாளரிடம் 7 மணி நேரம் போலீசார் விசாரணை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. உதவியாளரிடம் தனிப்படை போலீசார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர்.;
கோவை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. உதவியாளரிடம் தனிப்படை போலீசார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
கொலை, கொள்ளை வழக்கு
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவருடைய தோழி சசிகலா ஆகியோருக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் உள்ளது. இங்கு கடந்த 2017-ம் ஆண்டு காவலாளி ஓம்பகதூரை கொலை செய்யப்பட்டார்.
மேலும் பங்களாவுக்குள் இருந்த சில பொருட்களை கொள்ளையடிக்கப்பட்டன. இதுதொடர்பாக கோத்தகிரி போலீசார் கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ் உள்பட 10 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த கொலை, கொள்ளை தொடர்பாக மேல் விசாரணை நடத்த மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த தனிப்படையை சேர்ந்த போலீசார் இந்த வழக்கு தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முன்னாள் எம்.எல்.ஏ. உதவியாளர்
இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு சசிகலாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதுபோன்று கோவையை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வி.சி.ஆறுக்குட்டி, அவருடைய மகன், கோடநாடு பங்களாவில் மர வேலைப்பாடுகள் செய்த பர்னிச்சர் கடை உரிமையாளரும், அ.தி.மு.க. நிர்வாகியுமான சஜீவன், அவருடைய தம்பி உள்பட 200-க்கும் மேற்பட்டவர்களிடம் தனிப்படையை சேர்ந்த போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி கோவையை சேர்ந்த முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான வி.சி.ஆறுக்குட்டியின் உதவியாளர் நாராயணசாமிக்கு போலீசார் சம்மன் அனுப்பினார்கள். இதையடுத்து அவர் நேற்று காலை 11 மணியளவில் கோவையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் உள்ள அலுவலகத்தில் ஆஜரானார்.
7 மணி நேரம் விசாரணை
அவரிடம் ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையின்போது, முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு டிரைவராக வேலைபார்த்த கனகராஜின் செயல்பாடுகள் எப்படி இருந்தது? அவரை வேலைக்கு சேர்த்துவிட்டது யார்? கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் நடந்த பின்னர் கனகராஜ் தொடர்பு கொண்டாரா? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை அடுக்கடுக்காக கேட்டதாக கூறப்படுகிறது.
மேலும் நீங்கள் கனகராஜை கடைசியாக எப்போது தொடர்பு கொண்டு பேசினீர்கள்? அதில் நீங்கள் பேசியது என்ன?, எது சம்பந்தமாக பேசிக்கொண்டு இருந்தீர்கள்? என்று கேட்டதாகவும் தெரிகிறது. இந்த விசாரணை மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. 7 மணி நேரம் விசாரணை முடிந்த பின்னர், அலுவலகத்தைவிட்டு வெளியே வந்த நாராயணசாமி, காரில் ஏறி சென்றார்.
3-வது முறையாக சம்மன்
ஏற்கனவே நாராயணசாமியிடம் விசாரணை நடத்த முதலில் அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பினார்கள். அப்போது அவர் வெளிமாநிலத்தில் இருப்பதால் வரமுடியவில்லை என்று கூறினார்.
இதையடுத்து அவருக்கு மீண்டும் 2-முறையாக சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து அவர் விசாரணைக்கு ஆஜராக வந்தார். அப்போது அவரை தொடர்பு கொண்ட அதிகாரிகள், வேறு ஒருநாள் ஆஜராகும்படி தெரிவித்தனர். அதன்பின்பு அவரிடம் விசாரணை நடத்தவில்லை.
இந்த நிலையில் தான் தற்போது ஆஜராகும்படி அவருக்கு 3-வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து அவர் நேற்று காலையில் விசாரணைக்கு ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.