சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு: தலைமறைவாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியர் போலீசில் சரண்

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விவகாரத்தில் தலைமறைவாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியர் இன்று போலீசில் சரண் அடைந்தார்;

Update: 2022-05-02 16:55 GMT
 பெங்களூரு: சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விவகாரத்தில் தலைமறைவாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியர் இன்று போலீசில் சரண் அடைந்தார்.

பிடிவாரண்டு

  கர்நாடகத்தில் 545 சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கு நடந்த தேர்வில் முறைகேடு நடந்தது பற்றி சி.ஐ.டி. போலீசார் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த வழக்கில் கலபுரகியை சேர்ந்த பா.ஜனதா பெண் பிரமுகர் திவ்யா காகரகி, பிளாக் காங்கிரஸ் தலைவர் மகாந்தேஷ், அவரது சகோதரர் ருத்ரேகவுடா பட்டீல், தேர்வில் முறைகேடு செய்து வெற்றி பெற்றவர்கள் என 24 பேரை கடந்த 30-ந் தேதி வரை போலீசார் கைது செய்து இருந்தனர்.
  
இதற்கிடையே இந்த வழக்கில் முக்கிய நபர்களான திவ்யா, என்ஜினீயர் மஞ்சுநாத், பள்ளி தலைமை ஆசிரியர் காசிநாத் உள்பட 6 பேருக்கு கலபுரகி கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து இருந்தது. மேலும் அவர்கள் 6 பேரும் சரண் அடைய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் கோர்ட்டு எச்சரித்தது. இதையடுத்து நேற்று முன்தினம் 21 நாட்கள் தலைமறைவாக இருந்த கலபுரகி நீர்பாசனத்துறை என்ஜினீயர் மஞ்சுநாத் கலபுரகியில் உள்ள சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்திற்கு வந்து போலீசார் முன்பு சரண் அடைந்தார்.

தலைமை ஆசிரியர் சரண்

  இந்த நிலையில் இன்று 25 நாட்களாக போலீசாரால் தேடப்பட்டு வந்த தலைமை ஆசிரியர் காசிநாத்தும், கலபுரகியில் உள்ள சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்திற்கு வந்து போலீசார் முன்பு சரண் அடைந்தார். அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை தங்களது காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  இந்த வழக்கில் இதுவரை 26 பேரை சி.ஐ.டி. போலீசார் கைது செய்து உள்ளனர். இந்த நிலையில் தேர்வு முறைகேடு கலபுரகியில் நடந்தது என்று முதலில் கூறப்பட்டு வந்தது. ஆனால் பெங்களூருவில் உள்ள 5 தேர்வு மையங்களிலும் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மேலும் பெலகாவியில் நடந்த உடல்தகுதி தேர்விலும் முறைகேடு நடந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

3-வது நாளாக விசாரணை

  இதற்கிடையே கைதான திவ்யா, மகாந்தேஷ், ருத்ரேகவுடா ஆகியோரிடம் இன்று போலீசார் 3-வது நாளாக தீவிர விசாரணை நடத்தினர். இந்த தேர்வில் வெற்றி பெற்ற 545 பேருக்கும் விசாரணைக்கு ஆஜராக நோட்டீசு அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் 100 பேர் பல்வேறு காரணங்களை கூறி விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்து உள்ளது.
  
கடந்த 2 நாட்களில் 172 பேர் விசாரணைக்கு ஆஜரானார்கள். அவர்களில் ஓ.எம்.ஆர்.சீட் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. ஆய்வு அறிக்கை வந்த பிறகு இந்த முறைகேடு மேலும் சிலர் கைது செய்யப்படுவார்களா என்பது பற்றி தெரியவரும்.
 
திவ்யாவை திட்டிய பிள்ளைகள்

  சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் கைதாகி உள்ள பா.ஜனதா பெண் பிரமுகர் திவ்யா, கலபுரகி மாவட்டம் ஆலந்தாவில் உள்ள பெண்கள் பாதுகாப்பு மையத்தில் அடைக்கப்பட்டு உள்ளார். 

இந்த நிலையில் நேற்று மாலையில் திவ்யாவை அவரது பிள்ளைகள் சந்தித்து பேசினர். அப்போது திவ்யாவிடம், பிள்ளைகள் நீ செய்தது தவறு. உன்னை பற்றிய செய்திகளை தினமும் செய்திகளில் பார்க்கிறோம். உன்னால் தான் தந்தையும் சிறைக்கு சென்று விட்டார் என்று கூறி திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பிள்ளைகள் முன்பு திவ்யா கண்ணீா விட்டு கதறி அழுது உள்ளார்.
  
மஞ்சுநாத் சரண் அடைந்தது ஏன்?

  சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கில் 21 நாட்கள் தலைமறைவாக இருந்த கலபுரகி நீர்பாசனத்துறை என்ஜினீயர் மஞ்சுநாத் நேற்று போலீசில் சரண் அடைந்தார். இந்த நிலையில் மஞ்சுநாத் சரண் அடைந்தது ஏன் என்பது பற்றி தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மஞ்சுநாத்தின் சித்தப்பா மகளுக்கு வருகிற 8-ந் தேதி திருமணம் நடக்க உள்ளது. மஞ்சுநாத் தலைமறைவானதும் அவரது குடும்பத்தினரை பிடித்து போலீசார் விசாரித்து உள்ளனர். 

இதனால் தலைமறைவாக இருந்த மஞ்சுநாத்தை தொடர்பு கொண்டு பேசிய குடும்பத்தினர் தங்கைக்கு திருமணம் நடக்க உள்ள நிலையில் உன்னால் குடும்ப மானம் போகிறது. இதனால் போலீசில் சரண் அடைந்து விடும்படி கூறியுள்ளனர். இதையடுத்து மஞ்சுநாத் போலீசில் சரண் அடைந்தது தெரியவந்து உள்ளது.

மேலும் செய்திகள்