வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை பெறுவதற்கு நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்- பா.ம.க.

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை பெறுவதற்கு நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மயிலாடுதுறையில் நடந்த பா.ம.க. மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-05-02 18:45 GMT
மயிலாடுதுறை:-

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை பெறுவதற்கு நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மயிலாடுதுறையில் நடந்த பா.ம.க. மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

மாவட்ட பொதுக்குழு கூட்டம்

மயிலாடுதுறையில் பா.ம.க. மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிசாமி தலைமை தாங்கினார். வன்னியர் சங்க மாநில செயலாளர் தங்க.அய்யாசாமி, மாநில அமைப்பு துணை செயலாளர் காசி.பாஸ்கரன், மாநில இளைஞர் சங்க துணைத்தலைவர் விமல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட செயலாளர் காமராஜ் வரவேற்று பேசினார். இதில் பா.ம.க. மாநில இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். 
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

10.5 சதவீத இட ஒதுக்கீடு

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை உடனடியாக பெறுவதற்கு நடப்பு சட்டசபை கூட்டத்தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். சுதந்திர போராட்ட தியாகி சாமி நாகப்பன் படையாட்சியின் பெயரை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்துக்கு சூட்டுவதோடு, அங்கு அவருக்கு சிலை வைக்க வேண்டும். மணிமண்டபம் கட்ட வேண்டும். மயிலாடுதுறையில் புதிய பஸ் நிலைய பணிகளை உடனே தொடங்க வேண்டும். 
அனைத்து துறை அலுவலகங்களையும் மயிலாடுதுறைக்கு கொண்டு வரவேண்டும். குறுவை விவசாய பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதால் தடையின்றி மும்முனை மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மீத்தேன்-ஹைட்ரோ கார்பன்

கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் உப்பு நீராக மாறுவதை தடுக்க கொள்ளிடம் ஆற்றின் கடல் முகத்துவாரத்தில் இருந்து 5 கி.மீ. முன்பாக தடுப்பணை கட்ட வேண்டும். 
காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை தடுத்து நிறுத்த வேண்டும். மயிலாடுதுறை தரங்கம்பாடி- காரைக்கால் ரெயில் தடத்தை புதுப்பித்து மீண்டும் ரெயில் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. 
கூட்டத்தில் மாநில உழவர் பேரியக்க தலைவர் ஆலயமணி, மாநில வன்னியர் சங்க துணைத்தலைவர் பாக்கம் சக்திவேல், முன்னாள் மாநில துணைத்தலைவர் அய்யப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் கமல்ராஜா நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்