திராவக வீச்சில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு முக அறுவை சிகிச்சை

திராவக வீச்சில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு முக அறுவை சிகிச்சை நடந்தது

Update: 2022-05-02 16:46 GMT
பெங்களூரு: திராவக வீச்சில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு முக அறுவை சிகிச்சை நடந்தது.

திராவகம் வீச்சு

பெங்களூரு ஹெக்கனஹள்ளி கிராசில் வசித்து வரும் 25 வயது இளம்பெண் மீது ஒருதலைக்காதல் விவகாரத்தில் நாகேஷ் (வயது 29) என்பவர் திராவகம் வீசினார். இதில் முகத்தில் பலத்த தீக்காயம் அடைந்த அந்த இளம்பெண் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அந்த இளம்பெண்ணுக்கு முக அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டு இருந்தது.

இதையடுத்து பெங்களூரு விக்டோரியா ஆஸ்பத்திரியில் உள்ள தோல் தான மையத்தில் இருந்து தோல்களை அனுப்பி வைக்கும்படி தனியார் ஆஸ்பத்திரி கேட்டு இருந்தது. அதன்படி விக்டோரியா ஆஸ்பத்திரியில் இருந்து தானமாக பெறப்பட்ட தோல்கள், தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதையடுத்து அந்த தோல்கள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

முக அறுவை சிகிச்சை

ஆய்வின் முடிவில் தோலை பொருத்த அனுமதி கிடைத்ததையடுத்து இன்று இளம்பெண்ணுக்கு முக அறுவை சிகிச்சை நடந்தது. 
இதுகுறித்து அந்த ஆஸ்பத்திரியின் டாக்டர் கூறும்போது, ‘திராவகம் வீச்சில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு முக அறுவை சிகிச்சை செய்து உள்ளோம். முகத்தில் தீக்காயம் அதிகம் இருப்பதால் இன்னும் 3 நாட்களுக்கு வலி இருக்கும். அதன்பின்னர் வலி குறைந்து விடும். இளம்பெண்ணுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம்’ என்றார்.

இதற்கிடையே திராவகம் வீச்சில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் சகோதரிக்கு வருகிற 8-ந் தேதி திருமணம் நடக்க உள்ளது. இந்த சூழ்நிலையில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த இந்த நிலையால் குடும்பத்தினர் மனவருத்தத்தில் உள்ளனர். ஆனாலும் சகோதரியின் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்யும்படி இளம்பெண் பெற்றோர், உறவினர்களிடம் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இளம்பெண் மீது திராவகம் வீசிய நாகேஷ் இன்னும் தலைமறைவாக உள்ளார். அவர் வடமாநிலத்தில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்