பள்ளி மாணவர்கள் உள்பட 20 பேர் தீக்குளிக்க முயற்சி

பாதை ஆக்கிரமிப்பு பிரச்சினைக்கு தீர்வு கோரி தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பள்ளி மாணவர்கள் உள்பட 20 பேர் தீக்குளிக்க முயன்றதால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-05-02 16:36 GMT
தர்மபுரி:-
பாதை ஆக்கிரமிப்பு பிரச்சினைக்கு தீர்வு கோரி தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பள்ளி மாணவர்கள் உள்பட 20 பேர் தீக்குளிக்க முயன்றதால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தீக்குளிக்க முயற்சி
பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் திவ்யதர்சினி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் மனு அளிக்க அரூர் தாலுகா பூதிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் திரண்டு வந்தனர். கலெக்டர் அலுவலக வளாகத்துக்கு வந்த அவர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த பாட்டில்களில் இருந்த மண்எண்ணெயை திடீரென தங்கள் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர்.
பள்ளி மாணவ- மாணவிகள் உள்பட 20 பேர் ஒரே நேரத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை பார்த்து அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஓடிச்சென்று தீக்குளிக்க முயன்றதை தடுத்து நிறுத்தினார்கள். அப்போது தீயணைப்பு படை வீரர் சந்திரன் என்பவரின் கையில் லேசான காயம் ஏற்பட்டது.
பாதை ஆக்கிரமிப்பு
தகவல் அறிந்த கூடுதல் கலெக்டர் வைத்திநாதன், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் சாந்தி ஆகியோர் தீக்குளிக்க முயன்றவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது தீக்குளிக்க முயன்றவர்கள் கூறியதாவது:-
பூதிநத்தம் கிராமத்தில் பட்டா நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகிறோம். எங்கள் குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்லவும், விவசாய விளை பொருட்களை எடுத்துச் செல்லவும் 12 அடி பாதையை பயன்படுத்தி வருகிறோம். பல தலைமுறைகளாக பயன்படுத்தி வரும் இந்த பாதையை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். தற்போது அந்த பாதையை பயன்படுத்த முடியாத வகையில் இடையூறு செய்து வருகின்றனர்.
இதுதொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் பலமுறை மனு அளித்தோம். அரூர் உதவி கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளித்துள்ளோம். இருந்த போதிலும் பிரச்சினைக்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. எனவே பாதை பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.  இதுகுறித்து அதிகாரிகள் மற்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்