மணல் குவாரி அமைக்க தடை விதிக்க வேண்டும்
வேதாரண்யம் கொள்ளித்தீவு பகுதியில் மணல் குவாரி அமைக்க தடை விதிக்க வேண்டும் என கலெக்டரிடம், பொதுமக்கள் மனு அளித்தனர்.
வெளிப்பாளையம்,மே.3 -
வேதாரண்யம் கொள்ளித்தீவு பகுதியில் மணல் குவாரி அமைக்க தடை விதிக்க வேண்டும் என கலெக்டரிடம், பொதுமக்கள் மனு அளித்தனர்.
கலெக்டரிடம் மனு
நாகை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். இதில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பொதுமக்கள் கொடுத்தனர்.
நாகையை அடுத்த வேதாரண்யம் கொள்ளித்தீவு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மணல் குவாரி
வேதாரண்யம் கடற்கரையையொட்டி கொள்ளித்தீவு பகுதி அமைந்துள்ளது. இந்த கொள்ளித்தீவு பகுதியை சுற்றி செட்டிக்குளம், குப்பையன்காடு, பனையங்காடு, நாகதோப்பு, ராமகிருஷ்ணபுரம் உள்ளிட்ட ஊர்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் மணல் குவாரி அமைக்க கனிமவளத்துறை அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே பல இடங்களில் மணல் குவாரி அமைத்து மணல் அள்ளப்படுகிறது. இதனால் விளைநிலங்கள் பாதிப்படைந்துள்ளன.
தடை விதிக்க வேண்டும்
மணல் அள்ளப்படுவதால் மழை, வெள்ள காலங்களில் கடல்நீர் ஊருக்குள் உட்புகுந்து விடுகிறது.இந்த நிலையில் மீண்டும் இந்த பகுதியில் ஒரு மணல் குவாரி அமைத்தால் கடல் நீர் புகுந்து விளைநிலங்கள் உவர்நிலமாக மாறிவிடும். எனவே கொள்ளித்தீவு பகுதியில் மணல் குவாரி அமைக்க தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.