உப்பு விலை கிடு, கிடு உயர்வு

வேதாரண்யம் பகுதியில் உற்பத்தி பாதிக்கப்பட்டதால் உப்பு விலை கிடு, கிடுவென உயர்ந்துள்ளது.

Update: 2022-05-02 16:31 GMT
வேதாரண்யம்:
வேதாரண்யம் பகுதியில் உற்பத்தி பாதிக்கப்பட்டதால் உப்பு விலை கிடு, கிடுவென உயர்ந்துள்ளது.
உப்பு உற்பத்தி பாதிப்பு
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய கிராமங்களில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்த படியாக 2-வது இடத்தில் வேதாரண்யம் உள்ளது. 
இந்த ஆண்டு வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு பெய்த மழையால் 5-வது முறை உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. 
விலை கிடு, கிடு உயர்வு
இதை தொடர்ந்து தற்போது மீண்டும் உப்பு உற்பத்தி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி பகுதிகளில் மழை பெய்ததால் அங்கு உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உப்பு விலை உயர்ந்துள்ளது.  
இதேபோல வேதாரண்யம் பகுதியில் விட்டு விட்டு பெய்த மழையால்  உற்பத்தி பாதிக்கப்பட்டதால் உப்பு இருப்பு கணிசமாக குறைந்து வருகிறது. இதனால் உப்பு விலையும் கிடு, கிடுவென உயர்ந்துள்ளது. ஒரு டன் உப்பு ரூ.600 முதல் ரூ.1,000 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஒரு டன் உப்பு ரூ. 3 ஆயிரம்  முதல் ரூ. 3 ஆயிரத்து 500 வரை விற்பனையாகிறது.  
இயற்கை ஒத்துழைத்தால்...
செப்டம்பர் மாதம் வரை மழை பெய்யாமல் இருந்தால் உப்பு உற்பத்தி உயரும். உப்பு விலையும் குறையும். இயற்கை ஒத்துழைத்தால் தான் உப்பு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்களின் வாழ்வு சிறக்கும். 
இல்லாவிட்டால் வேறு தொழில் வாய்ப்புகள் இல்லாத வேதாரண்யம் பகுதியில் இருந்து வெளியேறி  வேலை தேடி செல்லும் நிலை ஏற்படும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்