மூங்கில்துறைப்பட்டு அருகே புனித சவேரியார் ஆலய ஆடம்பர தேர் பவனி திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
மூங்கில்துறைப்பட்டு அருகே புனித சவேரியார் ஆலய ஆடம்பர தேர்பவனி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
மூங்கில்துறைப்பட்டு,
ஆண்டு விழா
மூங்கில்துறைப்பட்டு அருகே சவேரியார்பாளையம் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த புனித சவேரியார் ஆலய ஆண்டு விழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் மாலை நேரத்தில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று இரவு நடந்தது. முன்னதாக பங்குத்தந்தை ஆண்ட்ரூஸ் மெஜ்ஜல்லா தலைமையில் கூட்டு திருப்பலியும், பிரார்த்தனையும் நடைபெற்றது.
தேர் பவனி
அதைத்தொடர்ந்து 10 மணியளவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் புனித அந்தோணியார், சவேரியார், ஆரோக்கிய மாதா, அன்னை தெரசா, காவல் சம்மனசு, செபஸ்தியார் உள்ளிட்ட சொரூபங்கள் வைக்கப்பட்டு ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இந்த தேர்பவனியானது முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.
இதில் சவேரியார் பாளையம், மூங்கில்துறைப்பட்டு, மைக்கேல்புரம், ஈருடையாம்பட்டு, அருளம்பாடி, இளையாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். தேர்பவனிக்கான ஏற்பாடுகளை ஊர் காரிய காரர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். இந்த ஆலயத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக தேர் பவனி நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.