வேலை வாங்கித்தருவதாக ரூ.35 லட்சம் மோசடி 2 பெண்கள் மீது புகார்
வேலை வாங்கித்தருவதாக ரூ.35 லட்சம் மோசடி செய்ததாக 2 பெண்கள் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.;
வேலூர்
வேலூர் அலமேலுரங்காபுரம் கொல்லைமேடு பகுதியை சேர்ந்த கலைச்செல்வி என்பவர் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணனிடம் புகார் மனு ஒன்று அளித்தார்.
அதில், எனக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் எம்.எஸ்சி. மற்றும் மருத்துவ படிப்பு படித்துவிட்டு கடந்த 2014-ம் ஆண்டு முதல் வேலை தேடி கொண்டிருந்தனர். அப்போது ஆம்பூர் ரெட்டித்தோப்பு பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும், காட்பாடி ரெயில்வே காலனியில் வசித்து வரும் பெண் ஒருவரும் என்னை அணுகினார்கள்.
அவர்கள் ரூ.35 லட்சம் கொடுத்தால் 2 மகள்களுக்கும் தமிழ்நாடு அரசு மருத்துவத்துறையில் வேலை வாங்கி தருவதாக உறுதியளித்தனர். அதனை உண்மை என்று நம்பி பலரிடம் கடன் பெற்று ரூ.35 லட்சம் கொடுத்தேன். ஆனால் அவர்கள் இதுவரை வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வருகிறார்கள்.
கொடுத்த பணத்தை அவர்களிடம் திருப்பி கேட்டபோது பணத்தை கொடுக்க முடியாது என்றும் மீறி தொந்தரவு கொடுத்தாலோ அல்லது வேறு வழிகளில் பணத்தை கேட்டாலோ கூலிப்படையை வைத்து கொன்று விடுவதாக மிரட்டல் விடுக்கிறார்கள். எனவே வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.35 லட்சம் பெற்று மோசடி செய்த இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவர்களிடமிருந்து எங்கள் பணத்தை மீட்டு கொடுத்து, எனது குடும்பத்தினரின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.