இளம்பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது
இளம்பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சில தினங்களுக்கு முன் சவுட்டூர் கிராமம் அருகே செல்போனில் பேசியபடி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் செல்போனை பறித்து சென்றனர். இது குறித்து அந்த பெண் பொதட்டூர்பேட்டை போலீசில் புகார் செய்தார். திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராக்கி குமாரி வழக்குப்பதிவு செய்து செல்போனை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தார். இந்த நிலையில் நேற்று காலை பள்ளிப்பட்டு - பொதட்டூர்பேட்டை செல்லும் சாலையில் கூட்ரோடு அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது இளம்பெண்ணிடம் செல்போனை பறித்து சென்ற வாலிபர் அவர் என்பது தெரியவந்தது.
அவரது பெயர் சீனிவாசன் (வயது 23). இவர் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா மேட்டுத்தாங்கல் கிராமத்தில் பஜனை கோவில் தெருவில் வசித்து வருபவர் என்பதும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். அவருடன் வந்த மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.