‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தெருவில் தேங்கும் கழிவுநீர்
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா உன்னங்குளம் கிராமம் ஸ்ரீரெங்கராஜபுரம் 1-வது வார்டு நாடார் தெரு மேற்கு பகுதியில் வீட்டின் கழிவுநீர், தெருவில் குளம் போல் தேங்கி கிடக்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, முறையாக வாறுகால் அமைத்து கழிவுநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கண்ணன், ஸ்ரீரெங்கராஜபுரம்.
அரசு டவுன் பஸ் வசதி
நாங்குநேரியில் இருந்து ஏர்வாடிக்கு எந்தவொரு அரசு டவுன் பஸ்சும் இதுவரை இயக்கப்படவில்லை. இதனால் கிராமங்களில் உள்ள பள்ளி செல்லும் மாணவர்களும், வேலைக்கு செல்லும் பெண்களும் அரசின் கட்டணமில்லா பஸ் வசதியை பெறுவதற்கு வழியில்லாமல் உள்ளது. எனவே காலை, மாலை இரண்டு வேளையும் நாங்குநேரியில் இருந்து ஏர்வாடி வழியாக வள்ளியூர் வரை செல்லும் வகையில் அரசு டவுன் பஸ் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.
பாலசுப்பிரமணியன், நாங்குநேரி.
குண்டும் குழியுமான சாலை
நெல்லை மேலப்பாளையம் சந்தை ரவுண்டானாவில் இருந்து நெல்லை சந்திப்புக்கு செல்லும் சாலையில் ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் அருகருகே வேகத்தடைகளும் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே, சாலையை சரிசெய்ய வேண்டும். மேலும், வேகத்தடைகளின் மீது வெள்ளை வர்ணம் பூச வேண்டும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
சாகுல்அமீது, மேலப்பாளையம்.
பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?
ராதாபுரம் தாலுகா விஜயாபதி பஞ்சாயத்து மேல விஜயாபதியில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் வெயில் நேரத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே, பயணிகள் நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.
புழுதி பறக்கும் சாலை
நெல்லை- அம்பை சாலை விரிவாக்கப்பணியையொட்டி சேரன்மாதேவி அருகே கூனியூர் பஸ்நிறுத்தம் முதல் மண்பாண்ட கூட்டுறவு சங்கம் வரையிலான இடங்களில் கடந்த 20 நாட்களாக மேலாக சாலைப்பணிகள் நடந்து வருகிறது. தற்போது புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். எனவே, சாலைப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
முருகன், கூனியூர்.
ஆற்றுக்குடிநீர் வேண்டும்
நெல்லை ராமையன்பட்டி அருகில் உள்ள செல்வநந்தினிநகர் போலீஸ் காலனி பகுதியில் தாமிரபரணி ஆற்றுக்குடிநீர் நீண்ட நாட்களாக வரவில்லை. இதனால் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் சென்று குடிநீர் எடுத்து வர வேண்டிய அவல நிலை உள்ளது. ஆகவே, தாமிரபரணி ஆற்றுக்குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டேனியல் சுந்தர், செல்வநந்தினிநகர்.
குப்பைகள் அள்ளப்படுமா?
பாளையங்கோட்டை யூனியன் கீழநத்தம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிரசண்ட்நகர் பகுதியில் மசூதி அருகே குப்பைக்கூளங்களாக பல நாட்களாக கிடக்கிறது. எனவே, குப்பைகளை அகற்றுவதற்கு பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
அகமதுல்லா, கிரசண்ட்நகர்.
பஸ் நிலையத்தில் சுகாதாரக்கேடு
தென்காசி புதிய பஸ்நிலையத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான பஸ்கள் வந்து செல்கின்றன. ஆயிரக்கணக்கான பயணிகளும் வந்து செல்கிறார்கள். தற்போது புதிய பஸ்நிலையம் முழுவதும் சுகாதாரக்கேடு நிலவுகிறது. அதாவது புதிய பஸ்நிலையத்தை சுற்றிலும் ஆண்கள் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுகிறது. அதன் அருகே தான் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியும் அமைந்துள்ளது. இதனால் பஸ்நிலையத்துக்கு வரும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் நபர்கள் மீது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சுகாதாரக்கேட்டை போக்க வேண்டுகிறேன்.
ராஜீவ்காந்தி, செங்கோட்டை.
திறக்கப்படாத அங்கன்வாடி மையம்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் யூனியன் காயாமொழி பஞ்சாயத்து வள்ளுவர்நகரில் அங்கன்வாடி மையம் கட்டி முடிக்கப்பட்டு 2 வருடங்கள் ஆகியும் இன்னும் திறக்கப்படவில்லை. எனவே, அங்கன்வாடி மையத்தை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இசைச்செல்வம், காயாமொழி.
தாழ்வாக செல்லும் மின்கம்பி
ஏரல் தாலுகா பெருங்குளம் பண்ணைவிளை பங்களா ரைஸ்மில் தெருவில் மின்கம்பி மிகவும் தாழ்வாக செல்கிறது. இங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நடந்து செல்கின்றனர். இதனால் ஆபத்து நேரிட வாய்ப்பு உள்ளதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
ஜெயபால், பண்ணைவிளை.