பத்திரப் பதிவுத்துறையில் மோசடியில் ஈடுபட்ட 44 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்

பத்திரப் பதிவுத்துறையில் மோசடியில் ஈடுபட்ட 44 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பதிவுத்துறை தலைவர் சிவன்அருள் தெரிவித்தார்.

Update: 2022-05-02 16:01 GMT
திருப்பத்தூர்

பத்திரப் பதிவுத்துறையில் மோசடியில் ஈடுபட்ட 44 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பதிவுத்துறை தலைவர் சிவன்அருள் தெரிவித்தார்.

குறைதீர்வு முகாம்

திருப்பத்தூர் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் குறைதீர்வு முகாம்  நடைபெற்றது. இதில் பத்திரப் பதிவுத்துறை தலைவர் சிவன்அருள் கலந்துகொண்டு 50-க்கும் மேற்பட்ட மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றார். 

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆள்மாறாட்டம்

தமிழகத்தில் 5,516 பத்திரங்கள் ஆள்மாறாட்டம் மூலம் பதிவு செய்துள்ளனர். அந்த பத்திரங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த பத்திரப்பதிவு அதிகாரிகள் மூலம் நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் புதிய மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு மாவட்ட பதிவுத்துறை அலுவலகம் கொண்டுவரப்பட்டு பதிவுத்துறை மாவட்ட அலுவலர் பணியாற்றி வருகின்றனர்.

பத்திரப்பதிவு சம்பந்தமாக புரோக்கர்கள் மூலம் சென்று பொதுமக்கள் ஏமாற வேண்டாம். நேரடியாக அதிகாரிகளை தொடர்புகொண்டு அவர்கள் மூலம் முறையான முறையில் பத்திர பதிவு செய்து கொள்ளலாம். 

2,100 போலி பத்திரப்பதிவு

தற்போது 38 மாவட்டங்களிலும் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு புதிய கட்டிடங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது சனிக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படை சனிக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு செய்து கொள்ளலாம். பத்திரப்பதிவு துறையில் இந்த ஆண்டு ரூ.16 ஆயிரம் கோடியே 21 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை ரூ.1,300 கோடி பத்திரப்பதிவுத் துறை மூலம் அரசுக்கு வருமானம் தந்துள்ளோம். 

இதுவரை 2,100 போலி பத்திரப்பதிவு கண்டுபிடிக்கப்பட்டு அவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. போலி பத்திரங்களை கண்டறிய மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பத்திர ஆவண எழுத்தர்கள் தற்போது 14 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே இனி ஆவண எழுத்தர் உரிமம் வழங்கப்படும்.

44 பேர் பணியிடை நீக்கம்

பத்திரப்பதிவு துறையில் மோசடியில் ஈடுபட்டதாக தமிழகம் முழுவதும் இதுவரை 44 பேர் பணியிடை நீக்கம்  செய்யப்பட்டுள்ளனர். அதிகாரிகள் மோசடியில் ஈடுபட்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

திருப்பத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் கூட அதிக அளவில் முறைகேடான பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக புகார் வந்துள்ளது. அதனை தணிக்கை அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்து உரிய சார்பதிவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 முகாமில் வேலூர் மண்டல துணை பதிவுத்துறை தலைவர் சுதாமல்யா, மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) சுடரொளி, மாவட்ட பதிவாளர் தன்னிச்சை ஸ்ரீதர், சார் பதிவாளர் வாணி மற்றும் பதிவுத்துறை அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்