முக்கிய நபர்களை காப்பாற்ற அரசு முயற்சி; டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் முக்கிய நபர்களை காப்பாற்ற அரசு முயற்சி செய்வதாக டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2022-05-02 15:38 GMT
பெங்களூரு:

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் முக்கிய நபர்களை காப்பாற்ற அரசு முயற்சி செய்வதாக டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். 
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சில முக்கிய நபர்கள்

  போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் ஒரு மந்திரியின் சகோதரருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அது மந்திரியின் உறவினர் என்று எனக்கு தகவல் கிடைத்துள்ளது. ஒரே தாலுகாவை சேர்ந்த 3 பேர் அந்த பணிக்கு தேர்வாகியுள்ளனர். அவர்கள் தங்களின் சொத்துகளை விற்று லஞ்சம் வழங்கியுள்ளனர் என்பது அவர்களின் கிராமத்தினருக்கு தெரியும்.

  இந்த வழக்கில் சி.ஐ.டி. போலீசார் நேர்மையான முறையில் விசாரணை நடத்த வேண்டியது மிக முக்கியம். உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண், ராம்நகருக்கு வந்து இங்கு யாரும் ஆண்மகன்கள் இல்லை என்று பேசுகிறார். அவர் ஒருவர் மட்டுமே ஆண்மகன். அதனால் அவரை பார்த்தால் எங்களுக்கு பயம். முறைகேடு புகார் எழுந்துள்ளதால் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை அரசு ரத்து செய்துள்ளது. இதன் மூலம் சில முக்கிய நபர்களை காப்பாற்ற இந்த அரசு முயற்சி செய்கிறது.

முரண்பாடாக உள்ளது

  ஆனால் போலீஸ் டி.ஜி.பி., நேர்மையான முறையில் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு அநீதி ஏற்படவிட மாட்டோம் என்று கூறியுள்ளார். அரசின் முடிவும், போலீஸ் டி.ஜி.பி.யின் கருத்தும் முரண்பாடாக உள்ளது. இந்த முறைகேட்டில் தொடர்புடையது யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த முறைகேட்டில் ஈடுபட்ட மந்திரியின் பெயரை குறிப்பிட வேண்டாம், அவர் வரும் நாட்களில் முதல்-மந்திரி ஆவார் என்று என்னை தொலைபேசியில் அழைத்து கூறுகிறார்கள். இந்த முறைகேட்டில் ஈடுபட்ட மந்திரியின் பெயரை சொல்ல எனக்கு பயம். அதனால் அவரது பெயரை குறிப்பிட விரும்பவில்லை.
  இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

மேலும் செய்திகள்