தற்கொலை செய்து கொண்ட சட்ட கல்லூரி மாணவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
தற்கொலை செய்து கொண்ட சட்ட கல்லூரி மாணவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தற்கொலை
திருவாரூர் மாவட்டம் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவபிரகாசம். இவரது மகள் கவிபிரியா. செங்கல்பட்டு அரசு சட்ட கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி வளாகத்தில் இருந்த விடுதியில் தங்கி இருந்தார்.
இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி கவிபிரியா தன்னை சக மாணவிகள் கிண்டல் செய்ததாக தனது தந்தைக்கு செல்போனில் தெரிவித்து விட்டு மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை தொடர்ந்து அவரது உடல் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டது.
உடல் ஒப்படைப்பு
கவிபிரியாவின் தந்தை சிவப்பிரகாசம் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரணை நடத்திவந்தனர். இந்த நிலையில் கவிபிரியாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரை கிண்டல் செய்த மாணவிகளை விசாரித்து அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து வந்தனர்.
இதுகுறித்து பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடும், தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர், போலீஸ் துறை அதிகாரிகள் முன்னாள் எம்.எல்.ஏ.வும் பா.ம.க. மாநில துணை பொதுச் செயலாளருமான திருக்கச்சூர் ஆறுமுகம், வக்கீல் சக்கரபாணி மற்றும் கவிப்பிரியாவின் தந்தை, உறவினர்கள் ஆகியோர் முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் மூலம் அரசு தலைமையிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதன் பின்னர் கவிபிரியாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதிகாரி நியமனம்
இந்த சம்பவத்தில் விசாரணை மேற்கொள்ள சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரி முதல்வர் கவுரி ரமேஷ் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக புதுப்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரி இயக்குனர் சொக்கலிங்கம் அறிவித்துள்ளார்.
மேலும் விசாரணை மேற்கொண்டு வரும் போலீசாரும் விசாரணைக்கு கல்லூரி சார்பாக முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.