மண்ணிவாக்கம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம்

மண்ணிவாக்கம் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், கலெக்டர் ராகுல்நாத் பங்கேற்றனர்.

Update: 2022-05-02 14:05 GMT
கிராமசபை கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் மண்ணிவாக்கம் ஊராட்சியில் மே 1 தொழிலாளர் தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நடைபெற்றது. கூட்டத்திற்கு மண்ணிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கஜலட்சுமி சண்முகம் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சுமதி லோகநாதன், ஒன்றிய கவுன்சிலர் சோமசுந்தரம், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தமிழக அரசின் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் ஆகியோர் கலந்து கொண்டு கிராமசபை கூட்டத்தில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். அப்போது பொதுமக்கள் கே.கே.நகர் பகுதியில் புதிய ரேஷன் கடை, மற்றும் ஊராட்சியில் புதியதாக சமுதாய கூடம் கட்டி தரவேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். அப்போது அமைச்சர் அன்பரசன், கே.கே.நகர் பகுதியில் புதிய ரேஷன் கடையும், மண்ணிவாக்கம் ஊராட்சிக்கு சமுதாயக்கூடமும் மிக விரைவில் கட்டித்தரப்படும் என்று உறுதியளித்தார்.

மேலும் கூட்டத்தில் மத்திய, மாநில அரசு திட்டங்களுக்கு பயனாளிகள் தேர்வு செய்தல் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் காஞ்சீபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன், மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல் ராஜ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வகுமார், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் உதயா கருணாகரன், ஒன்றிய குழு துணைத் தலைவர் வி‌.எஸ்‌‌.ஆராமுதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கட்ராகவன், சாய் கிருஷ்ணன், ஊராட்சி மன்ற செயலர் டி.ராமபக்தன், மற்றும் அரசு அலுவலர்கள், கிராம மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஊரப்பாக்கம்

இதேபோல ஊரப்பாக்கம் ஊராட்சியில் தலைவர் பவானி கார்த்தி, வண்டலூர் ஊராட்சியில் தலைவர் முத்தமிழ்செல்வி விஜயராஜ், நெடுங்குன்றம் ஊராட்சியில் தலைவர் வனிதா ஸ்ரீ சீனிவாசன், வேங்கடமங்கலம் ஊராட்சியில் தலைவர் கல்யாணி ரவி, கீரப்பாக்கம் ஊராட்சியில் தலைவர் செல்வசுந்திரி ராஜேந்திரன், பெருமாட்டுநல்லூர் ஊராட்சியில் தலைவர் பகவதி நாகராஜன், காரணைப்புதுச்சேரி ஊராட்சியில் தலைவர் நளினி ஜெகன், ஆகியோர் தலைமையில் மே தினத்தை முன்னிட்டு ஊராட்சிகளில் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குன்னவாக்கம்

மே தினத்தையொட்டி காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட குன்னவாக்கம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் சத்யா தலைமை தாங்கினார். பற்றாளர் உமாபதி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 2½ ஏக்கரில் புதிய குளம் அமைப்பது, சாலை மற்றும் குடிநீர் வசதிகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் சிவசங்கரி, உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதுபோல வீராபுரம் ஊராட்சியில் நடந்த கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் டில்லி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சரவணன், ஒன்றிய கவுன்சிலர் மோகனா ஜீவானந்தம் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்தல், முதியோர் உதவித்தொகை வழங்கிடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஜெகதீசன் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி துரை பாபு தலைமை தாங்கினார். துணை தலைவர் கே.பி.ராஜன், ஒன்றிய கவுன்சிலர் ஜெயலட்சுமி அண்ணாமலை முன்னிலை வகித்தனர். பகத்சிங் நகரில் குடியிருப்போருக்கு வீட்டு வரி ரசிது வழங்கக்கோரியும், சத்யாநகர் பகுதியில் புதிய ரேஷன் கடை அமைக்க கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

இதில் கிராம நிர்வாக அலுவலர் கருணாகரன், வருவாய் ஆய்வாளர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அச்சரப்பாக்கம் ஊராட்சி

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் திம்மாபுரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கெங்கதுரை தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது, ஊராட்சி செயலாளர் தயாநிதி, துணைத்தலைவர் வெங்கடேஸ்வரி ராதாகிருஷ்ணன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

வெளியம்பாக்கம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது. ஊராட்சி செயலாளர் கவிநிலவு, துணைத் தலைவர் தனஞ்செழியன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட உதவி திட்ட அலுவலர் பாலாஜி சுந்தரம், அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஒரத்தி கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகலா, தேவராஜன், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் சிவகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேல்மருவத்தூர்

மேல்மருவத்தூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி தலைமையில் துணை தலைவர் அகத்தியன் முன்னிலையில் ஊராட்சி செயலாளா் செந்தில்குமார் தீர்மானங்களை வாசித்து கிராமசபை கூட்டம் நடைபெற்றது. அங்கு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அங்கு பற்றாளராக சித்ரா மாவட்ட கவுன்சிலர் ஒன்றிய கவுன்சிலர் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் சோத்துபாக்கம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் துணைத்தலைவர் அருணகிரி முன்னிலையில் ஊராட்சி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வட்டார வளர்ச்சி அலுவலர் வீரமுத்து, செய்யூர் தலைமை தனி தாசில்தார் வெங்கடேசன், கிராம நிர்வாக அலுவலர் சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் கீழ்மருவத்தூர் ஊராட்சி மன்ற கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மாசிலாமணி ஊராட்சி செயலாளர் மலர்விழி ஆகியோர் கலந்துகொண்டனர்.

மாமண்டூர்

மதுராந்தகம் ஒன்றியத்திற்குட்பட்ட சோத்துப்பாக்கம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு மதுராந்தகம் ஒன்றிய குழு தலைவர் கீதா கார்த்திகேயன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகலைச்செல்வன் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் ஜான்சி வேலாயுதம் கிராமசபை கூட்டத்தை நடத்தினர். அதேபோல் கெண்டிரச்சேரியில் ஊராட்சி மன்ற தலைவர் கீர்த்தனா தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகலைச்செல்வன், மதுராந்தகம் ஒன்றிய குழு தலைவர் கீதா கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதேபோல் மாமண்டூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் உஷாராணி ரவிக்குமார் தலைமையில் துணைத் தலைவர் கோபி, ஊராட்சி செயலாளா் பழனி ஆகியோர் முன்னிலையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

சூனாம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் தலைமையில் துணை தலைவர் தெய்வசிகாமணி ஆகியோர் முன்னிலையில் ஊராட்சி செயலாளர் வாசுதேவன் ஆகியோர் கிராமசபை கூட்டத்தை நடத்தினர். இதேபோல் வன்னியநல்லூரில் ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷ் தலைமையில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மாரியம்மாள், ஊராட்சி செயலாளா் ராஜேஷ் ஆகியோர் முன்னிலையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

திருக்கழுக்குன்றம்

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில் அனைத்து கிராமங்களில் கிராமசபபை கூட்டம் நடைபெற்றது. கொத்தமங்கலம் ஊராட்சி கிராமசபை கூட்டம் நெல்வாய் கிரமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கனகம்மாள் தலைமையில் நடந்தது. துணை தலைவர் குமார், ஊராட்சி மன்ற செயலாளர் தனசேகரன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டு தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது. ஒன்றிய கவுன்சிலர் அருள்பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சதுரங்கப்பட்டினம்

சதுரங்கப்பட்டினம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் அதன் தலைவர் ரேவதி சாமிநாதன் தலைமையில் நடந்தது. திருக்கழுக்குன்றம் ஒன்றியகுழு துணைத்தலைவர் பச்சையப்பன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு பகுதியில் 35 ஆண்டுகளாக வேலை செய்து வரும் ஒப்பந்த பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். கல்பாக்கம் அணுமின் நிலையத்தினர் வளர்ச்சி திட்டங்களுக்காக பல ஆண்டுகளாக நிலுவையில் வைத்துள்ள ஊராட்சிக்கு வரவேண்டிய தொழில் வரியை உடனடியாக செலுத்த வேண்டும். கல்பாக்கம் அணுமின் மின்நிலையம், அணுஆராய்ச்சி மையம் போன்றவற்றில் பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்களுக்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ள தொழிலாளர் வைப்பு நிதி, போனஸ் உள்ளிட்டவைகளை வழங்க அந்த நிர்வாகம் 100 சதவீதம் உறுதி அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்