மல்லை தமிழ் சங்கம் சார்பில் பெருந்தமிழன், பெருந்தச்சன் விருதுகள்
மல்லை தமிழ் சங்கம் சார்பில் பெருந்தமிழன், பெருந்தச்சன் விருதுகளை கவிஞர் வைரமுத்து வழங்கினார்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் மல்லை தமிழ் சங்கம் சார்பில் 2021 மற்றும் 2022 என 2 ஆண்டுகளுக்கான பெருந்தமிழன், பெருந்தச்சன், மாமல்லன், பெருந்தமிழன் இராஜராஜன் விருதுகள் வழங்கும் விழா நடந்தது. இதற்கு மல்லை தமிழ் சங்க செயலாளர் சிற்பி பாஸ்கரன் தலைமை தாங்கினார். மல்லை தமிழ் சங்க தலைவரும், ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளருமான மல்லை சத்யா வரவேற்று பேசினார். 2021-ம் ஆண்டுக்கான பெருந்தமிழன் விருது வி.ஜி.பி. உலக தமிழ்ச்சங்க தலைவர் வி.ஜி.சந்தோசத்திற்கும், பெருந்தமிழன் ராஜராஜன் விருது கல்வியாளர் டேவிட் கே.பிள்ளைக்கும், பெருந்தச்சன் விருது மாமல்லபுரம் அரசினர் சிற்ப கலைக்கல்லூரி முதல்வர் ஜெ.ராஜேந்திரனுக்கும், மாமல்லன் விருது தமிழ்நாடு ஆணழகன் கழக பொது செயலாளர் அரசுக்கு வழங்கப்பட்டது.
அதேபோல் 2022-ம் ஆண்டுக்கான பெருந்தமிழன் விருது இந்தோனேசியா தமிழ் சங்க நிறுவனர் விசாகன், பெருந்தச்சன் விருது மாமல்லபுரம் அரசினர் சிற்பகலை கல்லூரியின் உலோக சிற்பகலை பிரிவு பேராசிரியர் ராஜேந்திரன், மாமல்லன் விருது மஞ்சூரியா குங்பூ தற்காப்பு கலை சங்க செயலாளர் அசோக்குமார் ஆகியோருக்கும் வழங்கப்பட்டது. இந்த விருதுகளை கவிஞர் வைரமுத்து வழங்கினார்.
ஆண்டுதோறும் தமிழ் சான்றோர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்து வரும் மல்லை தமிழ்ச்சங்கத்திற்கு கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டி சிறப்புரையாற்றி பேசினார். விழாவில் மாமல்லபுரம் அரசினர் சிற்பக்கலைக்கல்லூரியின் ஓவிய பிரிவு மாணவர்கள் கவிஞர் வைரமுத்துவின் பென்சில் ஓவியத்தை நேரலையாக விழாமுன் பகுதியில் அமர்ந்து ஒரு மணி நேரத்தில் வரைந்து அசத்தினர். அந்த மாணவர்களை மேடைக்கு அழைத்து ஓவியங்களை பார்த்து ரசித்த வைரமுத்து மாணவர்களின் கைவண்ணத்தில் தீட்டப்பட்ட தனது ஓவியத்தை ரசித்து அதில் கையெழுத்திட்டு மாணவர்களின் திறமையை பாராட்டி ஊக்கப்படுத்தினார். விழாவில் மல்லை தமிழ்சங்க பொருளாளர் பெருமாள், இளம்பரிதி, முருகன், இளையராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.