14 ஆயிரத்து 14 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் 14 ஆயிரத்து 14 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் 14 ஆயிரத்து 14 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.
பிளஸ்-2 பொதுத்தேர்வு
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு வருகிற 5-ந்் தேதி தொடங்கி, 23-ந் தேதி வரை நடக்கிறது. பொதுத்தேர்வுகள் குறித்து திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் கூறியதாவது:-
திருப்பத்தூர் மாவட்டத்தில் 56 மையங்களில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடக்கிறது. 131 பள்ளிகளை சேர்ந்த 6 ஆயிரத்து 878 மாணவர்கள், 7 ஆயிரத்து 136 மாணவிகள் என மொத்தம் 14 ஆயிரத்து 14 பேர் தேர்வு எழுதுகின்றனர். பிளஸ்-1 பொதுத்தேர்வு 10-ந் தேதி தொடங்கி 31-ந் தேதி முடிவடைகிறது. இந்த தேர்வை 56 தேர்வு மையங்களில் 133 பள்ளிகளை சேர்ந்த 7 ஆயிரத்து 487 மாணவர்கள், 7 ஆயிரத்து 290 மாணவிகள் என மொத்தம் 14 ஆயிரத்து 777 பேர் எழுதுகின்றனர்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற 6-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி முடிகிறது. இந்த தேர்வை 69 தேர்வு மையங்களில் 220 பள்ளிகளை சேர்ந்த 8 ஆயிரத்து 715 மாணவர்கள், 8 ஆயிரத்து 251 மாணவிகள் என மொத்தம் 16 ஆயிரத்து 966 பேர் எழுதுகின்றனர்.
தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு அறைக்கு தண்ணீர் பாட்டில் கொண்டு செல்லலாம். எலக்ட்ரானிக் கால்குலேட்டர் கொண்டு செல்ல அனுமதி இல்லை. முக கவசம் அணிந்திருக்க வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.
பறக்கும்படை
தேர்வுகளை கண்காணிக்க 110 பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், 2 மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர், அனைவருக்கும் கல்வி உதவிதிட்ட அலுவலர் தலைமையிலான பறக்கும்படைகள் தேர்வுகளை கண்காணிக்கும்.
10-ம் வகுப்பு விடைத்தாள் மேரி இம்மாகுலேட் பள்ளி மையத்திலும், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 விடைத்தாள்கள் திருப்பத்தூர் டொமினிக் சேவியர் பள்ளி மையத்திலும் வைத்து திருத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.