பிரபல ரவுடியை கொலை செய்ய நாட்டு வெடிகுண்டுகளுடன் பதுங்கிய 4 பேர் கைது

பிரபல ரவுடியை கொலை செய்வதற்காக நாட்டு வெடிகுண்டுகள், பட்டாக்கத்தியுடன் பதுங்கி இருந்த 4 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-02 12:46 GMT
துணிக்கடையில் ரகளை

சென்னை பெரம்பூர் கென்னடி சதுக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஜாவித்(வயது 37). இவர், வியாசர்பாடி மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் துணிக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் 3 பேர், இவரது கடைக்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி, துணி எடுத்தனர்.

மேலும் ரூ.10 ஆயிரம் தரும்படி மிரட்டினர். அதற்கு ஜாவித் மறுத்ததால், ஆத்திரத்தில் அவரது கையில் கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த செம்பியம் போலீசார், கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் துணிக்கடையில் ரகளையில் ஈடுபட்டவர்களின் உருவம் பதிவாகி இருந்தது. ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 2 ரவுடிகளும் இதில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

நாட்டு வெடிகுண்டுடன் பதுங்கல்

இதையடுத்து நேற்று மாதவரம் பொன்னியம்மன் மேட்டில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்த வியாசர்பாடி பி.வி.காலனியை சேர்ந்த கலை என்ற கலைச்செல்வன் (26), மதவரம் பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார் என்ற பச்சைப்பாம்பு (26), அயனாவரம் பகுதியைச் சேர்ந்த அஜய் என்ற ஜோதிகுமார் (20), புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த தினகரன் (19) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

ரவுடிகளான இவர்கள் தங்கி இருந்த வீட்டில் இருந்து 3 பட்டாக்கத்திகள் மற்றும் 2 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசாரின் விசாரணையில் வியாசர்பாடி பி.வி.காலனியை சேர்ந்த பிரபல ரவுடி, அதே பகுதியில் நடைபெறும் கோவில் திருவிழாவுக்கு வருவதை அறிந்து, அவரை கொலை செய்ய திட்டம் தீட்டி, நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் பட்டாக்கத்திகளுடன் பதுங்கி இருந்ததும் தெரியவந்தது. கைதான 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்