வேலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளில் 4 மாதங்களில் 68 பேர் பலி

வேலூர் மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களில் சாலை விபத்துகளில் 68 பேர் பலியாகி உள்ளனர் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2022-05-02 12:20 GMT
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களில் சாலை விபத்துகளில் 68 பேர் பலியாகி உள்ளனர் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சாலை விபத்துகள்

வேலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்,

 மதுஅருந்தி விட்டு வாகனம் ஓட்ட கூடாது என்பதை வலியுறுத்தி பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகளில் வேகத்தடை, எச்சரிக்கை பலகை மற்றும் ஒளிரும் விளக்குகள் பொருத்தப்பட்ட கம்பங்கள் உள்ளிட்டவைகள் வைக்கப்பட்டுள்ளன.

அதைத்தவிர பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் தேசிய, மாநில நெடுஞ்சாலையை கடக்கும் பகுதிகளில் இரும்பு கம்பிகளால் ஆன தடுப்புகள் (பேரிகார்டு), மண் நிரப்பிய இரும்பு பேரல்கள் வைத்து வாகனங்கள் மெதுவாக செல்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் சாலை விபத்தினால் ஆண்டுதோறும் ஏராளமானோர் உயிரிழக்கும் நிலை காணப்படுகிறது.

68 பேர் பலி

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 4 மாதங்களில் நடந்த சாலை விபத்தில் 68 பேர் பலியாகி உள்ளனர். விபத்து தொடர்பாக 424 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விபத்தில் 31 பேர் பலத்த காயமும், 325 பேர் லேசான காயங்களும் அடைந்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் சாலை விபத்துகளில் 236 பேர் உயிரிழந்தனர். இருசக்கர வாகனங்கள், கார் உள்ளிட்ட வாகனங்களில் அதிவேகமாக செல்வது, மதுஅருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது போன்றவற்றால் தான் அதிகளவு விபத்துகள் ஏற்படுகின்றன.

எனவே வாகன ஓட்டிகள் மிதமான வேகத்தில் சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்றி பயணம் செய்வது நல்லது. போக்குவரத்து விதிகளை பின்பற்றாத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. சாலை விபத்துகளை குறைப்பதற்காக விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் ஏப்ரல் வரையிலான 4 மாதங்களில் 51 பேர் மட்டுமே பலியாகினர். இந்த ஆண்டு அதைவிட 17 பேர் அதிகமாக உயிரிழந்துள்ளனர் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்