பழையகாயலில் விவசாயிகள் பெயரில் மோசடியாக பெறப்பட்ட கூட்டுறவு கடன்களை ரத்து செய்ய கோரிக்கை

பழையகாயல் கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், பொதுமக்கள் பெயரில் மோசடியாக பெறப்பட்ட கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கலெக்டரிடம் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கோரிக்கை மனு கொடுத்தனர்.;

Update: 2022-05-02 12:04 GMT
தூத்துக்குடி:
பழையகாயல் கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், பொதுமக்கள் பெயரில் மோசடியாக பெறப்பட்ட கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கலெக்டரிடம் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கோரிக்கை மனு கொடுத்தனர்.
குறைதீர்க்கும் நாள்
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு கொடுத்தனர்.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு மாநில இந்து முன்னணி துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமையில், கோட்ட செயலாளர் சக்திவேல், மாநகர் மாவட்ட தலைவர் இசக்கிமுத்துகுமார், செயலாளர் ராகவேந்திரா, தெற்கு மாவட்ட செயலாளர் பிரபாகர் மற்றும் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். இதில் சிலர் நடராஜர், முருகன், விநாயகர் வேடம் அணிந்து வந்து இருந்தனர். அவர்கள் தேவாரம் பாடியும், சங்கொலி எழுப்பியும் வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் செந்தில்ராஜிடம் கொடுத்த மனுவில், தமிழகத்தில் சமூக ஊடகங்களில் இந்து தெய்வங்களை தொடர்ந்து இழிவுபடுத்தி செய்தி வெளியிடுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு யுடியூப் சேனலில் சிதம்பரம் நடராஜர் பெருமானை தவறான வகையில் விமர்சித்து கானொளி வெளியிட்டு உள்ளார்கள். இது இந்துக்கள் மத்தியில் பெரும் மனவேதனையை ஏற்படுத்தி உள்ளது. ஆகையால் சம்பந்தப்பட்ட யுடியூப் சேனலை தடை செய்த, மதக்கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்ட நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனர்.
தினக்கூலி
கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்கள் மாவட்ட கலெக்டரிடம் கொடுத்த மனுவில், நாங்கள் கோவில்பட்டி அரசு தலைமை ஆஸ்பத்திரியில் ஒப்பந்த ஊழியராக கடந்த 2014-ம் ஆண்டு முதல் பணி புரிந்து வருகிறோம். இந்த நிலையில் ஒப்பந்ததாரர் மாறி உள்ளார். இதனால் எங்களுக்கு புதிய ஊதிய அடிப்படையில் சம்பளம் வழங்காமல் 2019-ம் ஆண்டு வழங்கப்பட்ட பழைய சம்பளமே வழங்கப்படும் என்கிறார்கள். நாங்கள் இதனை நம்பித்தான் வாழ்ந்து வருகிறோம். ஆகையால் 2021-22-ம் ஆண்டுக்கான உயர்த்தப்பட்ட தினக்கூலியை வழங்கவும், கொரோனா காலத்தில் பணிபுரிந்த முன்கள பணியாளர்களுக்கு அரசு வழங்கிய ரூ.15 ஆயிரம் பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
தமிழக விவசாயிகள் சங்கம் ஓட்டப்பிடாரம் ஒன்றிய தாலுகா செயலாளர் தெய்வராஜ் மாவட்ட கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ஓட்டப்பிடாரம் யூனியன் கீழமங்கலம் பஞ்சாயத்தில் உள்ள மேலமங்கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு வந்தது. இந்த சுவரை அதிகாரி ஒருவர் வாய்மொழி உத்தரவால் இடித்து விட்டார். ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் விசாரணை நடத்தி, சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டதால் ஏற்பட்ட இழப்பீட்டை பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
வீட்டுமனைப்பட்டா
தூத்துக்குடி பிரையண்ட்நகர் 12-வது தெரு மேற்கு குருவிமேடு பகுதியை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், நாங்கள் கடந்த 60 ஆண்டுகளாக குருவிமேடு பகுதியில் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்று நீண்டநாளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் இதுவரை வழங்கவில்லை. ஆகையால் எங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
தூத்துக்குடி சிவபாரத இந்து மக்கள் இயக்க நிறுவனர் பாலசுப்பிரமணியன் தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் கொடுத்த மனுவில், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு ஆற்றுப்பாலம் பழுதடைந்து நீண்ட நாட்களாக ஒருவழிப்பாதையில் வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆகையால் விரைந்து பாலத்தை சீரமைக்க வேண்டும். அதுவரை சுங்க கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என்று கூறி உள்ளார்.
கடன் ரத்து
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி செயலாளர் மாரிச்செல்வம் தலைமையில் கட்சியினர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், பழையகாயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்த முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி தவறுகள் செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசுக்கு நிதி இழப்பு செய்து ஊழலுக்கு துணை போனவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள், விவசாயிகள், பொதுமக்கள் பெயரில் மோசடியாக பெறப்பட்டு உள்ள கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனர்.

மேலும் செய்திகள்