தொழிலாளியின் மனைவி, மகன்கள் கலெக்டரை நேரில் சந்தித்து மனு
சாராய வழக்கு தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்ட விசாரணை கைதி திடீரென உயிரிழந்ததார். இது குறித்து அவரது மனைவி, மகன்கள் கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
திருவண்ணாமலை
சாராய வழக்கு தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்ட விசாரணை கைதி திடீரென உயிரிழந்ததார். இது குறித்து அவரது மனைவி, மகன்கள் கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
விசாரணை கைதி சாவு
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா இளையங்குன்னியை அடுத்த தட்டரணை பகுதியை சேர்ந்தவர் தங்கமணி (வயது 48), கூலி தொழிலாளி. கடந்த 26-ந் தேதி திருவண்ணாமலை மதுவிலக்கு பிரிவு போலீசார் சாராய வழக்கு தொடர்பாக தங்கமணியை கைது செய்தனர்.
பின்னர் சிறையில் இருந்த அவர் திடீரென வலிப்பு ஏற்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு உயிரிழந்தார்.
கடந்த 27-ந் தேதி தங்கமணியின் உடல் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தங்கமணியின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், போலீஸ் தாக்கியிருக்கலாம் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
மேலும் தங்கமணியின் வழக்கில் தொடர்புடைய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும் வரை அவரது உடலை வாங்க மாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.
மேலும் திருவண்ணாமலை மதுவிலக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு உள்பட 4 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.
தொடர்ந்து நேற்று வரை 4 நாட்களாக தங்கமணியின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து வந்தனர். இதற்கிடையில் நேற்று செங்கம் தொகுதியை சேர்ந்த மு.பெ.கிரி எம்.எல்.ஏ., தங்கமணியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
கலெக்டரிடம் மனு
அதனைத்தொடர்ந்து இன்று காலை தங்கமணியின் மனைவி, மகன்கள் மற்றும் உறவினர்கள் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அவர்களுடன் திரைப்பட இயக்குனரும், சமூக ஆர்வலருமான லெனின்பாரதி வந்திருந்தார்.
அவர்கள் கலெக்டர் முருகேசை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
என் தந்தையை (தங்கமணி) கடந்த 26-ந் தேதி விசாரணை என்ற பெயரில் போலீசார் அழைத்து சென்று 27-ந் தேதி இரவு 8.40 மணி அளவில் இறந்து விட்டதாக தெரிவித்தார்கள். இந்த இறப்புக்கு உரிய நீதி வழங்க வேண்டும்.
இதற்கு ஆதரவு தெரிவித்த எங்கள் ஊரில் வசிக்கும் மக்களை மறைமுகமாக போலீசார் பொய் வழக்கு போடுவதாக மிரட்டி வருகிறார்கள். இதற்கு தகுந்த பாதுகாப்பு தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என் தந்தை (தங்கமணி) இறந்து விட்டார். இதனால் எங்கள் வாழ்வாதாரமே பாதிப்படைந்து உள்ளது. எனவே எங்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் தந்தையை இழந்து வாடும் எங்களுக்கு அரசாங்க வேலை வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கோரிக்கை மனுவை பெற்று கொண்ட கலெக்டர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பின்னர் தங்கமணியின் மகன்கள் கூறுகையில், அரசு நிவாரணம் பெற்று தருவதாகவும் அரசாங்க வேலைக்கு ஏற்பாடு செய்வதாகவும் கலெக்டர் தெரிவித்துள்ளார். இதனால் நாங்கள் எங்கள் தந்தையின் உடலை வாங்கி கொள்ள உள்ளோம் என்றனர்.
அதேபோல் அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமாரையும் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.