மீன்பிடி தடை காலத்தால் ஆற்று மீன்களுக்கு திடீர் மவுசு
மீன்பிடி தடை காலத்தால் கடல் மீன்கள் விற்பனைக்கு அதிகம் வராததால் மீன்பிரியர்கள் அதிக அளவில் ஏரி, குளங்களில் உள்ள பெரிய மீன்களை வாங்கிச்செல்கின்றனர்.
தமிழகத்தில் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 15-ந் தேதி வரை மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்களுடைய படகுகள், என்ஜின்கள், மீன்பிடி வலைகளை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனால் தற்போது ஆற்று மீன்களுக்கு திடீர் மவுசு ஏற்பட்டு உள்ளது. மீன் மார்க்கெட்டில் ஆறு, ஏரி, குளங்களில் பிடிக்கும் மீன்களை பொதுமக்கள் அதிக விலை கொடுத்து வாங்கி செல்கின்றனர். இதனால் பழவேற்காட்டில் செம்பாசிபள்ளிகுப்பம், நடுவூர்மாதாகுப்பம், கூனங்குப்பம், லைட்அவுஸ்குப்பம், கோரைக்குப்பம், சாத்தாங்குப்பம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் கொசஸ்தலை ஆறு, ஆரணி ஆறு, ஏரி, குளங்கள், குட்டைகளில் மீன் பிடித்து வருகின்றனர்.