கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய ஐ.ஐ.டி. மாணவர்கள் கண்டுபிடித்த நவீன கருவி

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க ஐ.ஐ.டி. மாணவர்கள் நவீன கருவியை கண்டுபிடித்து உள்ளனர்.

Update: 2022-05-02 10:32 GMT
நவீன கருவி

தொழிற்சாலை மற்றும் வீடுகளில் உள்ள கழிவுநீர் தொட்டி, பாதாள சாக்கடை கால்வாய்களில் இறங்கி கழிவுநீரை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் பலியாகி வருகின்றனர். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் சென்னை ஐ.ஐ.டி. மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பேராசிரியர் பிரபு ராஜகோபால் தலைமையிலான மாணவர் குழுவினர், ரோபோ தொழில்நுட்ப முறையில் புதிய அதிநவீன கருவியை கண்டுபிடித்து உள்ளனர்.

இந்த கருவியில் கழிவுநீர் தொட்டியில் உள்ள கெட்டியான கசடுகளை வெட்டி ஒரே மாதிரியாக மாற்றும் வகையில் ரோபோ எந்திரம் உருவாக்கப்பட்டு உள்ளது. பின்னர் இந்த கருவி மூலம் கழிவுநீரை முற்றிலும் உறிஞ்சி எடுத்து அகற்ற முடியும். இதன் மூலம் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி உயிரிழப்புகள் ஏற்படுவதை முற்றிலும் தடுக்க முடியும்.

சென்னையை அடுத்த தாம்பரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த நவீன எந்திரத்தை பயன்படுத்துவது குறித்து கழிவுநீர் அகற்றும் தொழிலாளர்களுக்கு ஐ.ஐ.டி. மாணவர்கள் விளக்கினர்.

தொழிலாளி மனைவிக்கு வழங்கினர்

பின்னர் முதல் எந்திரத்தை 2007-ம் ஆண்டு கழிவுநீர் அகற்றும் பணியின்போது விஷவாயு தாக்கி உயிரிழந்த தொழிலாளியின் மனைவி நாகம்மாளுக்கு ஐ.ஐ.டி. மாணவர்கள் வழங்கினர். கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது இனிமேல் எந்த மனித உயிருக்கும் ஆபத்து ஏற்படக்கூடாது என்ற கருத்தை வலியுறுத்தி இந்த நவீன ரோபோ எந்திரத்தை தயாரித்து உள்ளோம். மனித உயிர்கள் இனி விஷவாயு தாக்கி போகக் கூடாது. இந்த எந்திரத்தை பெற்றுக்கொண்ட நாகம்மாள், அந்த பகுதியில் கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு அதனை கொடுத்து பயன்படுத்துவார் என பேராசிரியர் பிரபு ராஜகோபால் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்