கண்ணகிநகரில் மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவன்

மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-05-02 10:18 GMT
கணவன்-மனைவி தகராறு

சென்னையை அடுத்த கண்ணகிநகர் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 42). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி தனலட்சுமி (38). இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.

தியாகராஜன் பெயிண்டர் வேலைக்கும் சென்று வந்தார். கடந்த சில மாதங்களாக அவர், குடிபழக்கத்துக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் தியாகராஜன் வேலைக்கு செல்லாததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் தெரிகிறது.

கத்தியால் குத்திக்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த தியாகராஜன், மனைவி தனலட்சுமியை வேலைக்கு செல்லும்படி வற்புறுத்தினார். இதனால் கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த தியாகராஜன், வீட்டில் இருந்த கத்தியால் மனைவி தனலட்சுமியை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த தனலட்சுமி, ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த கண்ணகி நகர் போலீசார், தனலட்சுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தியாகராஜனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்