காரில் கடத்திய ரூ.5 லட்சம் போதை பொருட்கள் பறிமுதல்
பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் காரில் கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அணைக்கட்டு
பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் காரில் கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வட மாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
வாகன தணிக்கை
அண்டை மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்களை கடத்தி வரும் கும்பலை பிடிக்க வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் தனிப்படை சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பெங்களூருவிலிருந்து சென்னை நோக்கி சென்ற ஒரு காரை போலீசார் மடக்கி காரில் இருந்த மூன்று நபர்களிடம் விசாரணை நடத்தினர். 3 நபர்களும் முன்னுக்கு பின் முரணாக கூறியதால் சந்தேகம் அடைந்த போலீசார் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு காரில் சோதனை செய்ததில் சீட்டுக்கு அடியிலும், காரின் டிக்கியிலும் பிளாஸ்டிக் மூட்டைகளில் பான் மசாலா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.
போதை பொருட்கள் பறிமுதல்
அதைத்தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை செய்ததில் காரில் இருந்தவர்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் மாவட்டம் புன்வா பகுதியைச் சேர்ந்த பீமா ஜி என்பவரது மகன் மேகாராம் (வயது 24), அசாம் மாநிலம் உதல்குரி பனாரி அஞ்சல் கடுவ ராஜ் கிராமத்தைச் சேர்ந்த பசன்கான் மகன் ஷமீர்கான் (31) என்பது தெரியவந்தது.
கார் சென்னை சவுகார்பேட்டை பகுதியைச் சேர்ந்த கைலாஷ் என்பவருக்கு உரியது என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் பெங்களூருவிலிருந்து சென்னைக்கு தடை போதை பொருட்களை கடத்தி சென்றதாக கூறினர். அதைத்தொடர்ந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து 2-பேரையும் கைது செய்தனர்.