தற்கொலை செய்து கொண்ட போலீஸ் ஏட்டு கைப்பட எழுதிய உருக்கமான கடிதத்தால் பரபரப்பு
உடுப்பியில் தற்கொலை செய்து கொண்ட போலீஸ் ஏட்டு கைப்பட எழுதிய உருக்கமான கடிதம் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதில் உதவி போலீஸ் கமிஷனர் உள்பட 4 பேர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.
மங்களூரு:
போலீஸ் ஏட்டு தற்கொலை
உடுப்பி டவுன் பைந்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 40). மாவட்ட ஆயுதப்படையில் ஏட்டுவாக பணியாற்றி வந்தார். கடந்த மாதம் (ஏப்ரல்) .30-ந் தேதி இவர் உடுப்பி டவுன் பகுதியில் உள்ள ஆதி உடுப்பி பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி விடைத்தாள் திருத்தும் மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென்று ராஜேஷ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து உடுப்பி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது தற்கொலைக்கான உண்மையான காரணம் தெரியவில்லை. குடும்ப சூழ்நிலை அல்லது பணி சுமையால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தனிப்படை போலீசார் விசாரித்து வந்தனர்.
கடிதம் சிக்கியது
இந்த நிலையில் நேற்று அவர் கைப்பட எழுதிய உருக்கமான கடிதம் கிடைத்தது. அதில் எனது தற்கொலைக்கு மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றும் உதவி போலீஸ் கமிஷனர் உமேஷ், அஷ்பக், கங்குலி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் காரணம் என்று குறிப்பிட்டிருந்தார். இதை ஆதாரமாக எடுத்து கொண்ட போலீசார், எதற்காக அவர்கள் பெயரை குறிப்பிட்டுள்ளார் என்று விசாரித்தனர். அப்போது ராஜேஷ் சமீபத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார். இதற்கு காரணம் கங்குலி போலீஸ் நிலையத்தில் உள்ளவர்கள்தான் என்று ராஜேஷிற்கு தெரிந்துள்ளது. உடனே அவர் கங்குலி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் தரப்பில் கடும் நெருக்கடி கொடுத்ததும், மன அழுத்தம் தாங்க முடியாமல் ராஜேஷ் தற்கொலை செய்து கொண்டது போலீசுக்கு தெரியவந்தது. இதையடுத்து உடுப்பி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 போலீசாரிடமும் தீவிர விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.