ஆன்லைனில் பொம்மை ஆர்டர் செய்த பெண்ணிடம் ரூ.5½ லட்சம் மோசடி
ஆன்லைனில் பொம்மை ஆர்டர் செய்த பெண்ணிடம் ரூ.5½ லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
திருச்சி:
ஆன்லைனில் பொம்மை ஆர்டர்
திருச்சி கோட்டை அல்லிமால்தெருவை சேர்ந்தவர் திவாகர். இவருடைய மனைவி அனுஷ்கா. இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். சாப்ட்வேர் என்ஜினீயரான அனுஷ்கா தற்போது திருச்சியில் வீட்டில் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் அவருடைய கணவரின் பிறந்த நாளுக்கு பரிசளிப்பதற்காக கடந்தாண்டு டிசம்பர் மாதம் 7-ந் தேதி ஆன்லைன் மூலம் பறக்கும் பொம்மை ஆர்டர் செய்தார். இதற்காக அவர் ரூ.8 ஆயிரத்தை ஆன்லைன் மூலம் பொம்மை விற்பனை செய்யும் நிறுவனத்துக்கு செலுத்தினார்.
ரூ.5 லட்சத்து 46 ஆயிரம் மோசடி
சிறிதுநேரத்தில் அனுஷ்காவை வாட்ஸ்-அப் எண்ணில் தொடர்பு கொண்ட ஒருவர், தான் ஆன்லைன் நிறுவனத்தின் விற்பனை மேலாளர் பேசுவதாகவும், நீங்கள் ஆர்டர் செய்த கிப்ட் அமெரிக்கா, போர்ச்சுக்கல், இத்தாலி, பாகிஸ்தான் வழியே இந்தியா வருவதால் இன்வாய்ஸ் கிளீயரன்ஸ் செலுத்த வேண்டும் என்றும், இதற்கு மேலும் பணம் செலுத்த வேண்டும் என்று கூறி உள்ளார். மேலும் அந்த தொகையை பரிசு பொருள் வினியோகம் செய்யும்போது, திருப்பி தந்துவிடுவதாக கூறியுள்ளார். இதை நம்பிய அனுஷ்கா, பல்வேறு தவணைகளில் ரூ.5 லட்சத்து 46 ஆயிரம் வரை ஆன்லைன் மூலமாக செலுத்தினார்.
பணத்தை பெற்ற அந்த நபர், அதன்பின்னர் அவரை தொடர்பு கொள்ளவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அனுஷ்கா, இது குறித்து ஆன்லைன் மூலம் திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.