ஈரோடு மார்க்கெட்டில் வரத்து குறைவால் தக்காளி விலை உயர்வு; கிலோ ரூ.70-க்கு விற்பனை
ஈரோடு மார்க்கெட்டில் வரத்து குறைந்ததால் தக்காளி விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.70-க்கு விற்பனை ஆனது.
ஈரோடு
ஈரோடு மார்க்கெட்டில் வரத்து குறைந்ததால் தக்காளி விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.70-க்கு விற்பனை ஆனது.
தக்காளி விலை உயர்வு
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் பூக்கள் உதிர்ந்து, காய்கறி விளைச்சல் வெகுவாக குறைந்துவிட்டது. இதன் காரணமாக மார்க்கெட் மற்றும் சந்தைகளுக்கு காய்கறி வரத்து குறைந்து, விலை உயர்ந்து காணப்படுகிறது. குறிப்பாக தக்காளி வரத்து சரிந்ததுடன், விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது.
ஈரோடு வ.உ.சி. பூங்கா வளாகத்தில் செயல்பட்டு வரும் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும், தாளவாடி, சத்தியமங்கலம், தாராபுரம், பழனி, திருப்பூர், கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் 10 முதல் 15 டன் வரை தக்காளி வருகிறது.
கிலோ ரூ.70-க்கு விற்பனை
விளைச்சல் அதிகம் இருந்ததால் கடந்த மார்ச் மாதம் ஒரு கிலோ தக்காளி ரூ.10-க்கும் குறைவாகவே விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது தக்காளி வரத்து வெகுவாக குறைய தொடங்கி உள்ளது. ஈரோடு மார்க்கெட்டுக்கு நேற்று 4 டன் தக்காளி மட்டுமே விற்பனைக்கு வந்தது. இதன் காரணமாக கடந்த 10 நாட்களாக ரூ.50-க்கு விற்பனை ஆன ஒரு கிலோ தக்காளி நேற்று மேலும் ரூ.20 விலை உயர்ந்து ரூ.70-க்கு விற்பனை ஆனது.
இதுகுறித்து தக்காளி வியாபாரிகள் கூறும்போது, ‘தமிழகத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் பூக்கள் உதிர்ந்து தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக ஈரோடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து பாதியாக குறைந்துள்ளது. தற்போது கிருஷ்ணகிரி மற்றும் கர்நாடகா மாநிலம் கோலாரில் இருந்து மட்டுமே தக்காளி வரத்தாகிறது. கோடை மழை நீடித்தால் தக்காளி விலை இன்னும் உயர வாய்ப்பு உள்ளது’ என்றனர்.