கொரோனாவுக்கு இறந்தவர்களின் குடும்பத்தினர் நிவாரணம் பெற விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் தகவல்
கொரோனாவுக்கு இறந்தவர்களின் குடும்பத்தினர் நிவாரணம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம்:
கொரோனாவுக்கு இறந்தவர்களின் குடும்பத்தினர் நிவாரணம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்துசேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நிவாரணம்
கொரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்த நபர்களின் வாரிசுகளுக்கு கருணைத் தொகை வழங்கப்படுகிறது. இதற்காக பாதிக்கப்பட்டவர்கள் www.tn.gov.in என்ற இணையதளம் மூலம் மனுக்கள் பெறப்பட்டு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள இறப்பை உறுதி செய்யும் குழுவின் மூலம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இதுவரை 4 ஆயிரத்து 461 மனுக்கள் பெறப்பட்டு 3 ஆயிரத்து 591 மனுக்களுக்கு ரூ.50 ஆயிரம் வீதம் நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 680 மனுக்கள் இருமுறை பெறப்பட்ட மனு என்ற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டது.
மனுக்கள் மீது தீர்வு
20.3.2022-க்கு முன்பு ஏற்பட்ட கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் வரும் 60 நாட்களுக்குள் (18.5.2022 தேதிக்குள்) மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும். 20.3.2022 முதல் ஏற்படும் கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் இறப்பு நிகழ்ந்த 90 நாட்களுக்குள் மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட நிர்வாகம் 30 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும்.
எனவே குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் நிவாரணம் கோரி மனு சமர்ப்பிக்க இயலாதவர்கள் அது குறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்து கொள்ளலாம். இவ்வாறு பெறப்படும் முறையீட்டு மனுவினை ஒவ்வொரு இனமாக தகுதியின் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழு பரிசீலனை செய்து தீர்வு செய்யும்.
எனவே, கொரோனா தொற்று நோயின் காரணமாக இறந்தவர்களின் குடும்பத்தினர் உரிய காலத்தில் மனு செய்து நிவாரணம் பெற்று பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.