சேலம் மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை-வாழை, பாக்கு மரங்கள் முறிந்து சேதம்

சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது. பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் சூறைக்காற்றில் வாழை, பாக்கு மரங்கள் முறிந்து விழுந்து சேதம் அடைந்தன.

Update: 2022-05-01 22:31 GMT
சேலம்:
சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது. பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் சூறைக்காற்றில் வாழை, பாக்கு மரங்கள் முறிந்து விழுந்து சேதம் அடைந்தன.
பலத்த மழை
சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இதில் பெத்தநாயக்கன்பாளையம், புத்திரகவுண்டன் பாளையம், தளவாய்பட்டி, கொத்தாம்பாடி, ஓலைப்பாடி, ஒட்டப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.
பெத்தநாயக்கன்பாளையம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பாக்கு, வாழை மரங்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் பெத்தநாயக்கன் பாளையத்தில் விவசாயிகள் பயிரிட்டுள்ள சுமார் 2 ஆயிரத்தக்கும் மேற்பட்ட வாழை, பாக்கு மரங்கள் முறிந்து விழுந்து சேதமாகின. 
விவசாயிகள் கவலை
சில இடங்களில் பாக்கு மரங்கள் வேரோடும் சாய்ந்தன. குலை தள்ளிய வாழை மரங்களும் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர். சேதம் அடைந்த மரங்களை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு உரிய இழப்பீட்டை அரசிடம் பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி சின்னமசமுத்திரம் கொப்பு கொண்ட பெருமாள் மலை அடிவாரம் கோவில் முன்புறம் உள்ள மின் கம்பத்தின் அடிப்பகுதி மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்று பொதுமக்கள் பலமுறை பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த 6 மாத காலமாக புகார் தெரிவித்து வந்தனர். ஆனால் இதுவரை இந்த மின்கம்பம் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படவில்லை.
மின்கம்பம் சாய்ந்தது
இதனிடையே நேற்று மதியம் பலத்த மழைபெய்த போது வீசிய சூறைக்காற்றில் கோவில் முன்புறம் இருந்த பழுதடைந்த மின்கம்பம் பொதுமக்கள் செல்லும் பாதையில் சாய்ந்து விழுந்தது. இதில் அந்த பகுதியில் நின்ற காரின் மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த சாலையில் மின்கம்பம் விழுந்த இடத்தில் மழை காரணமாக ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் வேறு அசம்பாவிதம் எதுவும் நிகழவில்லை. மேலும் சுற்றுவட்டார பகுதிகளில் சில தென்னை மரங்களும் சாய்ந்து விழுந்து சேதம் அடைந்தன.
பகலில் கொளுத்திய வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் பிற்பகலில் பெய்த இந்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தேவூர்
இதேபோல் சுற்றுவட்டார பகுதிகளான அம்மாபாளையம், அரசிராமணி குள்ளம்பட்டி, செட்டிப்பட்டி, மூலப்பாதை, காவேரிப்பட்டி, மோட்டூர், சென்றாயனூர், தண்ணீர்தாசனூர், ஒக்கிலிபட்டி, கல்வடங்கம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்தது.  இந்த நிலையில் மாலையில் திடீரென பலத்த காற்று, இடி மின்னலுடன் கூடிய கனமழை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்தது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை நிலவியதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேட்டூர்
மேட்டூரில் நேற்று மாலையில் சூறைக்காற்று வீசியது. பின்னர் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்தது. சிறிது நேர இடைவெளிவிட்டு மீண்டும் சாரல் மழை பெய்தபடி இருந்தது. இந்த மழை காரணமாக ஒரு சில இடங்களில் மின்சார வினியோகம் தடைப்பட்டது.

மேலும் செய்திகள்