ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
ஏற்காடு:
விடுமுறை தினம் என்பதால் நேற்று ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அண்ணா பூங்காவில் வைக்கப்பட்டிருந்த மலர் செடிகளை பார்த்து ரசித்ததுடன், ஏற்காடு ஏரியில் படகு சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர். சேலத்தில் இருந்து பலர் மோட்டார் சைக்கிள்களில் ஏற்காட்டுக்கு வந்திருந்தனர். பயணிகள் கூட்டம் அதிகம் இருந்ததால், ஏற்காட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதே நேரத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் ஏற்காட்டில் அடிப்படை வசதிகள் குறைபாடுகள் இருப்பது சுற்றுலா பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மலைப்பாதைகள் பல இடங்களில் பாதுகாப்பற்ற நிலையிருப்பதோடு, பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பது வேதனை அளிப்பதாக சுற்றுலா பயணிகள் குற்றம்சாட்டினர். குறிப்பாக சுகாதார வசதிகளை மேம்படுத்துவதோடு, கழிப்பறைகள், சுற்றுப்புற சுகாதாரத்தை பேணி காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.