தமிழகத்தில் காங்கிரசார் கட்சி பணிகளை செய்வதே இல்லை-திருநாவுக்கரசர் எம்.பி. குற்றச்சாட்டு

தமிழகத்தில் காங்கிரசார் கட்சி பணிகளை செய்வது இல்லை என்று திருநாவுக்கரசர் எம்.பி. குற்றம் சாட்டி உள்ளார்.

Update: 2022-05-01 21:46 GMT
மதுரை,

தமிழகத்தில் காங்கிரசார் கட்சி பணிகளை செய்வது இல்லை என்று திருநாவுக்கரசர் எம்.பி. குற்றம் சாட்டி உள்ளார்.

மே தின விழா

மதுரையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ரெயில்வே தொழிலாளர் சங்க அலுவலகத்தில் மே தின விழா நடந்தது. விழாவில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி. கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். அதனை தொடர்ந்து தனியார் விடுதியில் மதுரை மாநகர் காங்கிரஸ் கலை இலக்கிய பேரவை சார்பில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இதில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினராக வெற்றிபெற்ற மாநகர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன், எஸ்.எஸ்.போஸ், எஸ்.வி.முருகன் உள்ளிட்ட கவுன்சிலர்களை பாராட்டினார்.
முன்னதாக நிருபர்களிடம் திருநாவுக்கரசர் எம்.பி. கூறியதாவது:-
மத்தியில் பா.ஜனதா அரசு பொறுப்பேற்றது முதல் சமையல் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்திக் கொண்டே வருகிறது. அண்டை நாடுகளில் பாதி விலைக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிற நிலையில், விலையேற்றம் என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பாக்கெட்டில் இருந்து நேரடியாக பணத்தை எடுப்பது போன்றது. இந்த விலையேற்றம் கண்டனத்திற்குரியது. இந்த விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும், கட்டுப்படுத்த தவறினால் மக்கள் தேர்தல் மூலம் தக்க பதிலடி கொடுப்பார்கள்.

நீதிமன்றத்தில் உள்ளூர் மொழி

மேலும் தமிழ்நாட்டில் இருமொழிக்கொள்கை தொடர்ந்து நடைமுறையில் உள்ளது. தமிழ் மற்றும் இணைப்பு மொழியாக ஆங்கிலம். இதுதான் மக்களின் நடைமுறையில் இருந்து வருகிறது. இதனைத் தாண்டி எந்த விதத்தில் பிற மொழிகளை திணிக்க நினைத்தாலும் மக்கள் ஏற்கமாட்டார்கள், அதே நிலையில் விருப்பத்தின் பேரில் கற்றுக் கொள்ளலாம். வேற்று மொழி திணிப்பு கண்டனத்திற்குரியது.
நீண்டகாலமாக நீதிமன்றங்களில் வழக்காடல் மொழி உள்ளூர் மொழிகளில் இருக்க வேண்டும் என்பதே அனைவரது ஒருமித்த கருத்தாக இருக்கிறது. மோடி தற்சமயம் கருத்து தெரிவித்திருப்பது மற்ற மாநிலங்களில் அழுத்தத்தின் காரணமாகவே என்று இருக்கும் என்று நினைக்கிறேன். 

கட்சி பணி செய்வதே இல்லை

 தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் கட்சி பணிகளை செய்வதே இல்லை, அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரும் கட்சியின் பூத் கமிட்டி வரையில் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று ெதரிவித்து உள்ளார். எனவே கட்சியினர் புரிந்து கொண்டு உழைக்க கற்று கொள்ள வேண்டும். ராகுல்காந்தியை பிரதமராக்க அனைவரும் உழைப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்