நில உரிமை பட்டா வழங்கியதன் மூலம் மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது

நில உரிமை பட்டா வழங்கியதன் மூலம் குமரி மாவட்ட மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

Update: 2022-05-01 21:40 GMT
நாகர்கோவில், 
நில உரிமை பட்டா வழங்கியதன் மூலம் குமரி மாவட்ட மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
நில உரிமை பட்டா
குமரி மாவட்ட வனத்துறை மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பில் வன உரிமை சட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நில உரிமை பட்டா வழங்கும் நிகழ்ச்சி கடையால் பேரூராட்சி செறுகடத்துகாணி மற்றும் சுருளக்கோடு கூவகாட்டுமலை பகுதியில் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு, 84 பயனாளிகளுக்கு நில உரிமை பட்டாவை வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து சிறப்பான ஆட்சியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு சீரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
நிறைவேறியது
குமரி மாவட்டத்திற்குட்பட்ட மலையோர பகுதிகளில் பழங்குடியின (காணி)மக்கள் அதிகமானோர் வசித்து வருகிறார்கள். வனப்பகுதியில் வாழும் மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் இன்றைய தினம் மொத்தம் 84 பயனாளிகளுக்கு 216 ஏக்கருக்கு வன உரிமை சட்டத்தின்கீழ் நில உரிமை பட்டா வழங்குவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
பழங்குடியின மக்களுக்கு மின்சாரம் வழங்கும் பணி பல்வேறு தடைகளுக்கிடையே தி.மு.க. அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பவியல் துறை மூலமாக கிராமங்களில் பல இடங்களில் செல்போன் டவர் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், செல்போன் டவர் பாலிசி ஒன்று தகவல்தொழில்நுட்பவியில் துறை மூலமாக வெளியிடப்பட்டிருக்கிறது. வெகுவிரைவில் அதற்கான பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.
பழங்குடியின மக்களில் படித்தவர்களுக்கு அரசு வேலை மட்டுமல்ல, அவர்களுக்கு பயிற்சி அளித்து பல்வேறு துறைகளில் பணிபுரியவும் அல்லது அவர்களே தொழில்முனைவோர்களாக மாற்றுவதற்கான பயிற்சிகளையும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட வன அலுவலர் இளையராஜா, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலர்மேல்மங்கை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் நாகராஜன், கடையால் பேரூராட்சி தலைவர் ஜூலியட், சுருளக்கோடு ஊராட்சி மன்ற தலைவர் விமலா மற்றும் அரசு அலுவலர்கள், மலைவாழ்மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கிராம சபை கூட்டம்
திருவட்டார் ஊராட்சி ஒன்றியம் சுருளகோடு ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஊராட்சித் தலைவர் விமலா சுரேஷ் தலைமை தாங்கினார். தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட கலெக்டர் அரவிந்த், திட்ட இயக்குனர் தனபதி, மகளிர் திட்ட அலுவலர் மைக்கேல் ஆன்டனி பெர்னாண்டோ, சமூக நல அலுவலர் சரோஜினி, திருவட்டார் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கீதா, விஜயன், திருவட்டார் தாசில்தார் தினேஷ் சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஊராட்சியில் பொது நிதி செலவினம் குறித்தும்,  ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. 
நடவடிக்கை
பொதுமக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் சுற்றுச் சூழல் அதிர்வு தாங்கு மண்டலம் வன எல்கையில் இருந்து 10 கி.மீ. தொலைவு இருந்த நிலையில், மலைகள் உடைக்கப்படுவது கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. இதன் பின்னர் மத்திய அரசு இந்த எல்கையை 10 கி.மீ. தொலைவில் இருந்து 3  கிலோ மீட்டராக சுருக்கியுள்ளது. 
மேலும் கல்குவாரிகளுக்கு ஆதரவாக கோர்ட்டு தீர்ப்புகளும் உள்ளன. கோர்ட்டுகள் கொடுத்துள்ள காலக்கெடு முடிந்தவுடன் அனைத்து கல்குவாரிகளையும் மூட நடவடிக்கை எடுக்கப்படும். 
கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்கு கோழி இறைச்சிக் கழிவுப் பொருள்களை ஏற்றி வரும் லாரிகள் தொடர்பான தகவல்களை மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு அளித்தால், அந்த லாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்