காலை, மாலை நேரங்களில் டவுன்பஸ்களை இயக்க வேண்டும்-வடுகப்பட்டி கிராம சபை கூட்டத்தில் அமைச்சரிடம் கோரிக்கை
பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்களுக்கு வசதியாக காலை, மாலை நேரங்களில் டவுன் பஸ்களை இயக்க வேண்டும் என வடுகப்பட்டி கிராம சபை கூட்டத்தில் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்து உள்ளனர்.;
வாடிப்பட்டி,
பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்களுக்கு வசதியாக காலை, மாலை நேரங்களில் டவுன் பஸ்களை இயக்க வேண்டும் என வடுகப்பட்டி கிராம சபை கூட்டத்தில் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கிராம சபை கூட்டம்
அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், வடுகப்பட்டி ஊராட்சியில் மே தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடந்தது. மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், வெங்கடேசன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகலா கலாநிதி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அரவிந்தன், ஒன்றிய சேர்மன் பஞ்சு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் வரவேற்றார்.
இந்த கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் பங்கஜவல்லி தீர்மானங்களை வாசித்தார்.அதில் ஊராட்சியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள், வரவு, செலவு கணக்குகள் மற்றும் இனிவரும் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டப்பணிகள் குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பஸ்கள் இயக்க வேண்டும்
அப்போது கிராம பெண்கள் அமைச்சரிடம், பொதுமக்கள் வேலைக்குச் செல்லவும் மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிக்கு செல்லவும் உரிய நேரமான காலை 8 மணி மற்றும் மாலை 4 மணிக்கு மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து வாடிப்பட்டிக்கு டவுன் பஸ்கள் விடுமாறு கோரிக்கை விடுத்தனர். உடனே அமைச்சர் கிளை மேலாளரை தொடர்பு கொண்டு நாளை(அதாவது இன்று) முதல் அந்த குறிப்பிட்ட நேரத்தில் பஸ் விட வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
மேலும் இந்த ஆண்டு முதல் பிளாஸ்டிக் இல்லாத ஊராட்சியாக மாற்றும் முயற்சியின் முதல்படியாக கிராம சபைக்கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு அமைச்சர் மூர்த்தி மஞ்சள் பைகளை வழங்கினார்.
அதன்பின் அமைச்சர் பி.மூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:-
ரூ.123 கோடி பொருட்கள் தயார்
சட்டமன்றத்தில் இலங்கை மக்களுக்கு உதவியளிக்க தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தின் அடிப்படையில் மத்திய அரசு அனுமதி வழங்கும் பட்சத்தில் 40 டன் அரிசி, பால் பவுடர் உள்ளிட்ட ரூ.123 கோடி மதிப்பிலான பொருட்கள் இலங்கைக்கு அனுப்புவதற்கு தயார் நிலையில் உள்ளது
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் தாசில்தார் நவநீதகிருஷ்ணன், அலங்காநல்லூர் ஒன்றிய ஆணையாளர் கதிரவன், பேரூராட்சி தலைவர்கள் வாடிப்பட்டி பால்பாண்டியன், அலங்காநல்லூர் ரேனுகா ஈஸ்வரி, மாவட்ட கவுன்சிலர் முத்துப்பாண்டி ஜெயசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அன்பு முத்து நன்றி கூறினார்.