தக்கலை அருகே மாயமான வாலிபர் கிணற்றில் பிணமாக மீட்பு
தக்கலை அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் மாயமான வாலிபர் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பத்மநாபபுரம்,
தக்கலை அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் மாயமான வாலிபர் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
ஜவுளிகடை ஊழியர்
தக்கலை அருகே உள்ள புங்கரை பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வரி. இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களுக்கு ஒரு மகளும், பிரதீப் (வயது30) என்ற மகனும் இருந்தனர்.
பிரதீப் நாகர்கோவிலில் உள்ள ஒரு ஜவுளி கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் திக்கணங்கோடு பகுதியை சேர்ந்த ஒரு பட்டதாரி பெண்ணுக்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெறுவதாக பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது.
இந்தநிலையில் 2 தினங்களுக்கு முன் பிரதீப் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பிரதீப்பை தேடி வந்தனர்.
கிணற்றில் பிணம்
இந்தநிலையில், நேற்று காலையில் பூக்கடை அருகே புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை அருகே பிரதீப்பின் ஸ்கூட்டர் நிற்பதை உறவினர்கள் கண்டனர். இதனால், சந்தேகம் அடைந்த உறவினர்கள் அந்த பகுதியில் பிரதீப்பை தேடினர். அப்போது அங்குள்ள ஒரு கிணற்றில் பிரதீப் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்சியடைந்தனர்.
இது குறித்து தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் தக்கலை தீயணைப்பு துறை நிலைய அலுவலர் ஜீவான்ஸ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி பிணத்தை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
பின்னர், பிணத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதீப் கொலை செய்யப்பட்டாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என பல்வறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணம் நிச்சயமான நிலையில் மாயமான வாலிபர் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்தபகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.