ரூ.1 கோடி மதிப்பிலான 150 கிலோ கஞ்சா பறிமுதல்
ஆந்திராவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான 150 கிலோ கஞ்சாவை திருத்துறைப்பூண்டியில் போலீசார் பறிமுதல் செய்து வாலிபர் ஒருவரை கைது செய்தனர்.
தஞ்சாவூர்:
ஆந்திராவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான 150 கிலோ கஞ்சாவை திருத்துறைப்பூண்டியில் போலீசார் பறிமுதல் செய்து வாலிபர் ஒருவரை கைது செய்தனர்.
கஞ்சா
தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் கஞ்சா, குட்கா விற்பனையை தடுக்கவும், வெளிமாநிலங்களில் இருந்து போதை பொருட்களை கடத்தி வரும் கும்பலை பிடிக்கவும் தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி உத்தரவு பிறப்பித்தார். அதன்படி 4 மாவட்டங்களிலும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
பறிமுதல்
இந்தநிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து திருவாரூர் மாவட்டம் வழியாக தஞ்சைக்கு காரில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசாா் திருத்துறைப்பூண்டி கடற்கரை சாலை பகுதியில் நேற்றுகாலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கார் ஒன்று வேகமாக வந்தது. அந்த காரை போலீசார் வழிமறித்து சோதனை செய்தபோது காருக்குள் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. இதைத்தொடர்ந்து காரில் இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான 150 கிலோ கஞ்சா பொட்டலங்களையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் காரை ஓட்டி வந்த திண்டுக்கல் மாவட்டம் கனவாய்பட்டியை சேர்ந்த மகேஸ்வரன் (வயது26) என்பவரை போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா, கார் மற்றும் காரை ஓட்டி வந்த மகேஸ்வரனை திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர்.
கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு
இது குறித்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் கூறியதாவது:-
டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கஞ்சா விற்பனையை தடுக்கவும், கஞ்சாவை கடத்தி வருபவர்களை பிடிக்கவும் டி.ஐ.ஜி. உத்தரவுபடி சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் டெல்டா மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து காரில் 150 கிலோ கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி உதவியோடு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு 150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
போலி நம்பர் பிளேட்டுகள்
மேலும் காரில் 3 போலி நம்பர் பிளேட்டுகள் இருந்தன. ஆந்திர மாநில பதிவெண் கொண்ட ஒரு நம்பர் பிளேட்டும், தமிழக எல்லையில் பிரபல வாடகை கார் நிறுவனத்தின் பதிவெண்ணும், அதன்பின்னர் ஒரு பதிவெண் கொண்ட நம்பர் பிளேட்டும் இருந்தன. ஆந்திர மாநிலத்துக்குள் செல்லும் போது அந்த மாநில பதிவு எண்ணையும், தமிழகத்துக்குள் வரும் போது தமிழக பதிவு எண்ணையும் பயன்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது.
கஞ்சா கடத்தலில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? இந்த கஞ்சா பொட்டலங்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.