பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆறுதல்
களிமேடு கிராமத்தில் நடந்த தேர்விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆறுதல்
வல்லம்:
தஞ்சை அருகே களிமேடு கிராமத்தில் நடந்த தேர்விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நேற்று குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் நேரில் ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
களிமேடு கிராமத்தில் நடைபெற்ற அசாதாரண விபத்து, அனைவரின் இதயத்தையும் உலுக்கிறது. ஆதீனங்களுடன் நடந்த கூட்டத்தை விரைவில் முடித்துக்கொண்டு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இக்கிராமத்திற்கு வந்து அனைத்து உதவிகளையும் செய்ததற்கு அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். எதிர்காலத்தில் இதுபோன்ற அசாதாரண விபத்து நடந்து விட கூடாது. ஏறத்தாழ 90 ஆண்டு காலமாக அப்பர் சாமியை இதயத்தில் தாங்கி, அப்பர் சாமி தான் எங்கள் ஆன்ம நாயகர் என இப்பகுதி மக்கள் கொண்டாடி வருவது ஆன்மீக உலகத்தில் சிறப்பு பெற்றது. அப்பர் பெருமான் தொண்டு நெறியில் வாழ்ந்தவர். தொண்டு தான் சமய வாழ்க்கை என உலகத்துக்கு அடையாளம் காட்டியவர். 7-ம் நுாற்றாண்டின் புரட்சி துறவி ஆவார். சாதி வேறுபாடு இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று இருந்தவர். திருவையாறு பகுதியை தென்கைலாயமாக மாற்றி அப்பருக்கு இறைவன் அளித்த திருத்தலம் உள்ளது. வருங்காலத்தில் இது போன்ற அசாம்பாவிதம் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் இயல்புநிலைக்குத் திரும்பவும், இறந்தவர்களின் ஆன்மா இறைவனின் திருவடியில் அமைதி பெறவும் பிராத்திப்போம். இவ்வாறு அவர் கூறினார்.