மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

கார் பருவ சாகுபடிக்கு மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீரை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.

Update: 2022-05-01 20:45 GMT
அம்பை:
கார் பருவ சாகுபடிக்கு மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீரை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.

கார் பருவ சாகுபடி

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையில் இருந்து கார் பருவ சாகுபடிக்கு ஆண்டுதோறும் மே மாதம் 1-ந்தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். அதன்படி மணிமுத்தாறு அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 84.40 அடி நீர்மட்டம் இருந்தது.

அணையின் பெருங்கால் மதகை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார். அந்த மதகின் வழியாக வினாடிக்கு 40 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
பின்னர் சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:-

120 நாட்கள் தண்ணீர் திறப்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், மணிமுத்தாறு அணை பெருங்கால் பாசன பகுதிகளுக்கு கார் சாகுபடிக்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதன்மூலம் ஜமீன் சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, வைராவிகுளம், தெற்கு பாப்பான்குளம், தெற்கு கல்லிடைக்குறிச்சி பகுதிகளில் உள்ள 2,756.62 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். வருகிற ஆகஸ்டு மாதம் 28-ந்தேதி வரையிலும் தொடர்ந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும். விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

விவசாயிகளுக்கு விவசாய கடன், நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. மேலும் விவசாயிகளுக்கு வட்டியில்லாத கடன் வழங்கப்படும். அறுவடை செய்த நெல் மூட்டைகளை அரசு கொள்முதல் நிலையங்களில் நேரடியாக இணையவழியில் பதிவு செய்து விற்பனை செய்யும் வசதி உள்ளது.

பூங்காவை சீரமைக்க...

பாபநாசம், மணிமுத்தாறு, கொடுமுடியாறு, பச்சையாறு, ஆலந்துறையாறு, பொய்கையாறு அணைகளை மலையில் சுரங்கம் மூலம் இணைப்பதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. உர விலையை மத்திய அரசு கட்டுப்படுத்துகிறது. மானியங்களை குறைத்ததால் உர விலை உயர்ந்திருக்கலாம். உர விற்பனையில் முறைகேடு புகார் எழுந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 2011-ம் ஆண்டுக்கு முன்பு மண்பாண்ட தொழிலுக்காக மண் எடுக்க அனுமதி அளித்தபடி மீண்டும் மண் எடுக்க அனுமதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மணிமுத்தாறு அருவிக்கு செல்ல விதிக்கப்படும் கட்டணம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து, அங்கு இலவசமாக பயணிகள் குளிக்க அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மணிமுத்தாறு அணையில் உள்ள பூங்காவை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு, ஞானதிரவியம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் இசக்கி சுப்பையா, ரூபி மனோகரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மாரியப்பன், உதவி செயற்பொறியாளர் தங்கராஜன், உதவி பொறியாளர்கள் முருகன், மகேஸ்வரன், வினோத்குமார், சிவகணேஷ் குமார், சுஷ்மி பென்சியா,
வேளாண்மை இணை இயக்குனர் கஜேந்திர பாண்டியன், உதவி இயக்குனர் உமா மகேஸ்வரி, கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி துணைத்தலைவர் இசக்கி பாண்டியன், விவசாயிகள் சங்க தலைவர் பாபநாசம், பஞ்சாயத்து தலைவர்கள் இசக்கிமுத்து, செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்