புனித அடைக்கல அன்னை ஆலய ஆடம்பர தேர்பவனி
சங்கராபுரம் அருகே புனித அடைக்கல அன்னை ஆலய ஆடம்பர தேர்பவனி விழா நடைபெற்றது.
சங்கராபுரம்
சங்கராபுரம் அருகே உள்ள விரியூர் கிராமத்தில் பழமை வாய்ந்த புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் ஆண்டுதோறும் தேர்பவனி வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
ஆனால் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேர் பவனி நடைபெறவில்லை. இந்த ஆண்டுக்கான விழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினமும் மாலை நேரத்தில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் கூட்டு திருப்பலி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. முன்னதாக பங்குதந்தை சகாயசெல்வராஜ் தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெற்றது. பின்னர் இரவு 10 மணிக்கு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் காவல் சம்மனசு, சூசையப்பர், அந்தோணியார், புனித அடைக்கல அன்னை, புனித ஜெபஸ்தியார் ஆகிய சொரூபங்கள் வைக்கப்பட்டன. தொடர்ந்து தேர்பவனி நடைபெற்றது. இந்த தேர்பவனியானது முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.
தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் விரியூர், பழையனூர், சோழம்பட்டு, அருளம்பாடி, மைக்கேல்புரம், சவேரியார்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை, ஊர் காரியகாரர்கள் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.