மே தின கிராம சபை கூட்டம்
கும்பகோணம், பட்டுக்கோட்டை பகுதிகளில் மே தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
ஒரத்தநாடு:
கும்பகோணம், பட்டுக்கோட்டை பகுதிகளில் மே தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
பொய்யுண்டார்கோட்டை ஊராட்சி
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியம் பொய்யுண்டார்கோட்டை ஊராட்சியில் மே தின கிராம சபை கூட்டம் சின்னையன் குடிக்காடு கிராமத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ்குமார் தலைமை தாங்கினார். இதில் ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றிய ஆணையர் ரமேஷ் உள்ளிட்ட அரசு துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டு அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கி கூறினர். கூட்டத்தில் கிராம வளர்ச்சி திட்டங்கள் குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பெண்கள் உள்ளிட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் சுரேஷ் நன்றி கூறினார்.
பேராவூரணி ஒன்றியம்
பேராவூரணி ஒன்றியத்தில் உள்ள 26 கிராம ஊராட்சிகளிலும் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக ஒன்றியத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தினை பேராவூரணி ஒன்றிய ஆணையர்கள் தவமணி, குமரவேல் மற்றும் ஒன்றிய அலுவலர்கள் ஆய்வு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கிராம ஊராட்சிகளின் செயலர்கள் செய்திருந்தனர்.
பேராவூரணி ஒன்றியத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 20 இடங்களில் கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவிற்கு கட்சியின் பேராவூரணி ஒன்றிய செயலாளர் இந்துமதி தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் பழனிவேலு கலந்துகொண்டு பேசினார்.
பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 43 ஊராட்சிகளிலும் மே தின கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கிராம பொது நிதி செலவினம், குடிநீர் சிக்கனம், கொசு ஒழிப்பு, சுகாதாரம், ஏரி, குளம் தூர்வாருதல், பிளாஸ்டிக் ஒழிப்பு உள்பட 12 தலைப்புகளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 43 ஊராட்சிகளிலும் நடந்த கூட்டத்திற்கு அந்தந்த ஊராட்சி தலைவர்கள் தலைமை தாங்கினர். இதில் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாமிநாதன், கோவிந்தராஜ், ஒன்றியக்குழு தலைவர் பழனிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பட்டுக்கோட்டையில் துப்புரவு தொழிலாளர் நலச் சங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பஸ் நிலையம் அருகில் மே தினவிழா கொண்டாடப்பட்டது.
கபிஸ்தலம்
கபிஸ்தலம் ஊராட்சியில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுமதி குணசேகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மகாலட்சுமி பாலசுப்பிரமணியன், ஒன்றிய கவுன்சிலர்கள் சுரேஷ், சரவணன் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் தமிழ்ச்செல்வன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் ஊராட்சியில் நடந்து முடிந்த பணிகள், நடைபெற உள்ள பணிகள், வரவு செலவு கணக்குகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நடந்து வரும் பணிகள், பணிகள் நடைபெற வேண்டிய இடத்தை தேர்வு செய்வது உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டன.
கபிஸ்தலம் பகுதியில் இந்திய கம்யூனிஸ்டு மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு சார்பில் மே தின கொடியேற்று விழா நடைபெற்றது. சுவாமிமலையில் தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் மே தின கொடியேற்று விழா நடைபெற்றது.
அம்மாப்பேட்டை, அய்யம்பேட்டை
அம்மாப்பேட்டை ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மே தின கொடியேற்று விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அம்மாப்பேட்டை
இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். தஞ்சை மாவட்ட ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் அய்யம்பேட்டை கிளை சார்பில் மே தின கொடியேற்று விழா நடைபெற்றது. அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா மே தின கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். இதில் தி.மு.க. நகர செயலாளர் வக்கீல் டி.பி.டி.துளசி அய்யா, முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பேரூராட்சி துணைத்தலைவர் அழகேசன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.