அமரர் ஊர்தி டிரைவர் தற்கொலை
அமரர் ஊர்தி டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.;
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், சத்திரமனை ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் அசோக் பிரபு (வயது 38). இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. அசோக் பிரபு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அமரர் ஊர்தியில் ஒப்பந்த டிரைவராக 8 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாட்களாக அசோக்பிரபுக்கும், ஈஸ்வரிக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால் கோபித்து கொண்டு ஈஸ்வரி நேற்று முன்தினம் கோவையில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனஉளைச்சலில் இருந்து வந்த அசோக் பிரபு நேற்று இரவு பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள உணவகம் பின்புறத்தில் கட்டிடத்தில் நண்பர் வக்கீல் ஒருவர் அலுவலகத்தின் மேலுள்ள அறைக்கு சென்று தனது மனைவியிடம் செல்போன் மூலம் வீடியோ காலில் பேசியுள்ளார். அப்போது அசோக் பிரபு தனது மனைவியிடம் தூக்கு மாட்டி இறக்கப் போவதாக தகவல் தெரிவித்துவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இதனால் சந்தேகமடைந்த ஈஸ்வரி உடனடியாக அந்த வக்கீலுக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். அவர் சென்று பார்க்கும் போது அறையில் மின்விசிறி கொக்கியில் நைலான் கயிற்றால் தூக்கில் தொங்கிய நிலையில் அசோக் பிரபு பிணமாக தொங்கி கொண்டிருந்தார். மேலும் இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அசோக் பிரபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.