பெங்களூருவில் வெளுத்து வாங்கிய கனமழை
பெங்களூருவில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது.
பெங்களூரு:
வாட்டி வதைத்த வெயில்
கர்நாடகத்தில் கடந்த சில தினங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்தது. இதனால் மக்கள் மதிய நேரத்தில் வீடுகள் முடங்கினர். மேலும் குளிர்பானங்களை பருகி தாகத்தை தணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல காலை வெயில் வாட்டி வதைத்தது.
இரவில் சீதோஷ்ண நிலை நிலவியது. இதனால் மழை பெய்யும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தூறல் மட்டுமே போட்டது. இந்த நிலையில் நேற்று காலையும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆனால் மதியத்திற்கு மேல் வெயில் குறைந்து வானில் கருமேகங்கள் கூடின. குளிர்காற்றும் வீசியது. இந்த நிலையில் மாலை 5 மணிக்கு மேல் திடீரென நகரில் கனமழை பெய்தது. மின்னலும் கண்ணை பறிக்கும் அளவுக்கு இருந்தது.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
முதலில் லேசாக ஆரம்பித்த மழை நேரம் செல்ல செல்ல வெளுத்து வாங்கியது. பெங்களூரு ராஜாஜிநகர், சேஷாத்திரிபுரம், ஒகலிபுரம், யஷ்வந்தபுரம், மெஜஸ்டிக், விதான சவுதா, கப்பன் பார்க் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலையில் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில் உத்தரஹள்ளியில் உள்ள ஒரு ராஜகால்வாயில் ஏற்பட்ட உடைப்பால் கழிவுநீர் வெளியேறி தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் வீடுகளில் புகுந்த கழிவுநீரை மக்கள் பாத்திரங்களில் பிடித்து வெளியே ஊற்றினர்.
பி.எம்.டி. லே-அவுட்டில் உள்ள ஐ.ஏ.எஸ். காலனி பகுதியில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததில் 10-க்கும் மேற்பட்ட கார்கள் சேதம் அடைந்தன. மேலும் ரெயில்வே சுரங்கபாதைகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். ஒயிட்பீல்டு, மாரத்தஹள்ளி, ஸ்ரீராமபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. பெங்களூரு கே.ஜி.சாலையில் சென்ற ஒரு பி.எம்.டி.சி. பஸ் மீது மரம் முறிந்து விழுந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் இல்லை. இந்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.