முத்துசேர்வாமடம் ஊராட்சியில் சலசலப்பு
முத்துசேர்வாமடம் ஊராட்சியில் சலசலப்பு ஏற்பட்டது.
மீன்சுருட்டி
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டம், முத்துசேர்வாமடம் ஊராட்சியில் உள்ள முக்குளம் கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் பாரதி தலைமையில், கிராமசபை கூட்டத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் 2021-2022-க்கான வரவு செலவினங்களை கேட்டபோது சலசலப்பு ஏற்பட்டது. இந்தக் கூட்டத்திற்கு ஜெயங்கொண்டம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தணிக்கை முருகன் கலந்துகொண்டு பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறினார். மேலும் வார்டு உறுப்பினர்கள் கேள்விகளுக்கு தனி ஒரு வீட்டிற்காக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றின் அஜந்தா தீர்மான நகலை கேட்டனர். அதற்கும் அதிகாரிகள் பதில் அளிக்கவில்லை. துணை தலைவர் காளிதாசன் சொந்த நிதியில் இருந்து கட்டியதாக கூறினார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன் மதியத்துக்கு மேல் கலந்து கொண்டார். பின்னர் பொதுமக்களின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினார். இதனால் கூட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்கள் கலைந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.